கோலாலம்பூர், 18 மார்ச் (பெர்னாமா) -- பிரதமராகவும் தம்புன் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தமது நியமனத்தை எதிர்த்து பி. வேதமூர்த்தி தாக்கல் செய்த வழக்குத் தொடக்க அழைப்பாணையை ரத்து செய்யக் கோரி டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் செய்த விண்ணப்பத்திற்கு, கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று அனுமதியளித்தது.
தேர்தல் விவகாரம் தொடர்பான எந்தவொரு சவாலும், தேர்தல் மனுவின் மூலமே தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும், அவ்வழக்கை விசாரிக்க நீதிமன்றத்திற்கு அதிகார வரம்பு இல்லை என்றும், அன்வாரின் விண்ணப்பத்திற்கு அனுமதியளித்த நீதிபதி எலிஸ் லோக் யீ சிங் முடிவுச் செய்தார்.
வழக்குத் தொடக்க அழைப்பாணையை விசாரித்தபோது, உயர் நீதிமன்றம் தேர்தல் நீதிமன்றமாகச் செயல்படவில்லை என்று கூறிய லோக், மேலும் கேள்விக்குரிய சட்ட நடவடிக்கையும் தேர்தல் மனுவின் மூலம் தாக்கல் செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.
இதுபோன்ற வழக்குகளை விசாரிப்பதற்காக தலைமை நீதிபதியால் நியமிக்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதி, தேர்தல் மனுக்களை விசாரிக்க வேண்டும் என்று 1954-ஆம் ஆண்டு தேர்தல் குற்றங்கள் செக்ஷன் 33(1) கூறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மூத்த வழக்கறிஞர் என்ற முறையில், வேதமூர்த்தி மேற்கொண்ட நடவடிக்கைகள், நீதிமன்ற நடைமுறையைத் தவறாகப் பயன்படுத்துவதாகும் என்ற அடிப்படையில், அன்வார் இப்ராஹிமின் வழக்கறிஞர் ரஞ்சித் சிங், ஒரு லட்சத்து 25,000 ரிங்கிட்டை செலவுத் தொகையைக் கோரி மனு தாக்கல் செய்தார்.
இதனிடையே, இவ்விவகாரம் தனிப்பட்ட பிரச்சனையல்ல, மாறாக தேசிய மற்றும் பொது நலன் சார்ந்தது என்பதால், நீதிமன்றச் செலவுகள் குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டாம் என்று வேதமூர்த்தியின் வழக்கறிஞர் எஸ். கார்த்திகேசன் வாதிட்டார்.
இருப்பினும், 80,000 ரிங்கிட்டை செலவுத் தொகையாக அன்வாருக்கும் செலுத்துமாறு நீதிமன்றம் வேதமூர்த்திக்கு உத்தரவிட்டது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]