பொது

வேண்டுமென்றே ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக சைஃபுல் ஹடி மீது குற்றச்சாட்டு

18/03/2026 03:58 PM

ஆயர் குரோ, 18 மார்ச் (பெர்னாமா) -- கைத்தொலைபேசி தொடர்பான தகராற்றின் விளைவால், தனக்கு நன்கு அறிமுகமான நபரைக் கொலை செய்ததாக ஆடவர் ஒருவர் இன்று ஆயர் குரோ மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

மஜிஸ்திரேட் ஷர்டா ஷின்ஹா முஹமட் சுலைமான் முன்னிலையில் அக்குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அது தனக்கு புரிந்ததாக சைஃபுல் ஹடி தலையசைத்தார்.

கொலை வழக்கு, உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டிருப்பதால் அவ்வாடவரிடமிருந்து எவ்வித வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

குற்றம் சாட்டப்பட்ட சைஃபுல் ஹடி ஒத்மான் என்பவர், கடந்த மார்ச் 11-ஆம் தேதி, இரவு மணி 7.58 முதல் 8.15-க்குள் சுங்கை ஊடாங்கில் உள்ள ஒரு வீட்டில், 25 வயதான முஹமட் ஹனாஃபி யூசோஃப் என்பவருக்கு வேண்டுமென்றே மரணம் விளைவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 302-இன் கீழ் சைஃபுல் ஹடி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் அல்லது அதிபட்சம் 40 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

மரணத் தண்டனை விதிக்கப்படாவிட்டால், 12 பிரம்படிகள் விதிக்கப்படும்.

இவ்வழக்கின் அடுத்த செவிமடுப்பு ஏப்ரல் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]