கோலாலம்பூர், 25 மார்ச் (பெர்னாமா) -- வெப்பநிலை 35 பாகை செல்சியஸைக் கடந்தால், வெளிப்புற நடவடிக்கைகளை ஒத்திவைக்குமாறு அனைத்து பள்ளிகளையும் கல்வி அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், மாணவர்களின் உடல்நலம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, அவர்களை வெப்பமான காலநிலைக்கு உட்படுத்தக்கூடிய செயல்பாடுகளையும் கண்காணிக்குமாறு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்போது, ஏற்படும் கடுமையான வெப்பத்தைச் சமாளிப்பதற்குத் தேவையான அனைத்து முன்னேற்பாட்டுப் பணிகளையும் அதிகரித்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் கல்வி அமைச்சு வலியுறுத்தியது.
கடும் வெப்ப சூழ்நிலையால், நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் வேளையில், குடிநீருக்கு வழி இல்லாத பட்சத்தில், விடுதிகளில் தங்கும் மாணவர்களுக்கு போதுமான நீர் வசதி ஏற்படுத்தித் தருமாறும் கூறப்பட்டுள்ளது.
வெப்பமான வானிலை காரணமாக மாணவர்களுக்கு ஏதேனும் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டால், எப்போதும் விழிப்புடன் இருந்து அருகிலுள்ள மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளுடன் ஒத்துழைக்குமாறும் பள்ளிகளுக்குக் கல்வி அமைச்சு நினைவூட்டியுள்ளது.
மேலும், அந்தந்த பள்ளி நிர்வாகங்களின் தேவைகள் மற்றும் தற்போதைய சூழ்நிலையைப் பொறுத்து, வெப்பமான காலநிலையின் போது மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் செயலாக்கக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் நேர்த்தியான விளையாட்டு உடைகளை அணிவதற்குப் பள்ளி நிர்வாகம் சிறப்பு அனுமதி வழங்குவதையும் பரிசீலிக்கலாம்.
அனைத்து கல்வி நிறுவனங்களும் தத்தம் பகுதிகளில் நிலவும் வெப்ப வானிலையின் தற்போதைய நிலவரம் குறித்து அறிந்திருக்க வேண்டும் என்றும், அவ்வப்போது வெளியிடப்படும் வழிகாட்டுதல்களை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இன்று வெளியிட்ட அறிக்கையில் கல்வி அமைச்சு கோடி காட்டியுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)