பொது

பட்டாசு & வாணவேடிக்கை கடையில் தீ - விசாரணைக்காக இருவர் கைது

25/03/2026 04:39 PM

கோத்தா பாரு, 25 மார்ச் (பெர்னாமா) -- கிளந்தான் கோத்தா பாரு, வக்காவ் செ யெ பகுதியில் பட்டாசு மற்றும் வாண வேடிக்கைகளை விற்பனை செய்யும் கடை ஒன்றில் நேற்று ஏற்பட்ட தீ விபத்து குறித்த விசாரணைக்கு உதவுவதற்காக, 44 மற்றும் 38 வயதுடைய இரண்டு பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இரவு மணி 8.30-க்கு கைது செய்யப்பட்ட அக்கடையின் உரிமையாளரும் பணியாளரும், குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 285-இன் கீழ் விசாரணைக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக  கோத்தா பாரு மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி முஹமாட் அஸ்மிர் டமிரி  தெரிவித்தார்.

அதே இடத்தில் பட்டாசு மற்றும் வாணவேடிக்கை வணிகம் நடத்துவதற்குச் செல்லுபடியாகும் அனுமதி பெற்றிருந்த 44 வயதுடைய உணவக உரிமையாளர் ஒருவரால் அக்கடை நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.

தீயணைப்பு தடயவியல் குழுவினர் மேற்கொண்ட பரிசோதனையில், வளாகத்தில் இருந்து கடையின் அலங்கார விளக்குகளுக்குச் செல்லும் மின் கம்பி இணைப்பில் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்திற்குக் காரணம் என உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும், இது குறித்த மேல் விசாரணை தொடர்கிறது.

இதனிடையே, வக்காவ் செ யெ, பத்து தீகாவில் உள்ள ஓர் உணவக வளாகத்தின் எதிரே, பட்டாசுகள் மற்றும் வாணவேடிக்கைகள் விற்கும் கடையில் நேற்று காலை மணி 10.13-க்கு தீ விபத்து ஏற்பட்டதாக முஹமாட் அஸ்மிர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)