பொது

ஜூன் வரை நீடிக்கக்கூடும் வெப்பம்

25/03/2026 04:05 PM

கோலாலம்பூர், 25 மார்ச் (பெர்னாமா) -- வறண்ட வளிமண்டல நிலை மற்றும் குறைந்த மழைப்பொழிவு காரணங்களினால், தற்போது நாட்டைப் பாதித்து வரும் வெப்பமான வானிலை, ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்குப் பருவமழை காலம் வரையில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு தற்போது வடகிழக்குப் பருவமழையின் இறுதிக் கட்டத்தில் உள்ளது.

இக்காலகட்டத்தில், குறிப்பாகத் தீபகற்பத்தின் வடக்கு மற்றும் உட்புறப் பகுதிகளில், மழைப்பொழிவு குறைந்து, வெப்பமான மற்றும் வறண்ட வானிலை நிலவும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம், மெட்மலேசியா கூறுகின்றது.

உள்நாட்டு மற்றும் அனைத்துலக வானிலை மாதிரி கணிப்புகளின்படி, அடுத்த சில மாதங்களில் நாட்டில் இயல்பை விடக் குறைவான மழைப்பொழிவுடன் வறண்ட வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மெட்மலேசியா செயல்பாட்டுப் பிரிவின் துணைத் தலைமை இயக்குநர் அம்புன் டின்டாங் தெரிவித்தார்.

பருவமழை மாற்றக் காலகட்டம், மார்ச் மாத இறுதியில் தொடங்கி மே மாதம் வரையில் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீபகற்பத்தின் மேற்குக் கடற்கரை மற்றும் உட்புறப் பகுதிகள், மேற்கு சபா மற்றும் சரவாக் ஆகிய இடங்களில், குறிப்பாகப் பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வார இறுதி முதல் மழைப்பொழிவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தீபகற்பத்தின் மேற்கு மற்றும் உட்புறப் பகுதிகள், மேற்கு சபா மற்றும் சரவாக் ஆகிய பெரும்பாலான பகுதிகளும் பாதிக்கப்படும் என்று அம்புன் பெர்னாமாவிடம் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)