கோலாலம்பூர், 25 மார்ச் (பெர்னாமா) -- நாட்டின் அமைதியையும் பாதுகாப்பையும் நிலைநிறுத்தும் சீருடைப் படையினரில், போலீசார் என்றுமே முன்னணியில் உள்ளனர்.
கம்பீரத்துடன் கண்ணியம் காத்து கடமையாற்றும் அவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 25-ஆம் தேதி அரச மலேசிய போலீஸ் தினம் கொண்டாடப்படுகிறது.
1807-ஆம் ஆண்டு பினாங்கில் பிரகடனப்படுத்தப்பட்ட இத்தினம், இன்று 219-வது ஆண்டாக அனுசரிக்கப்படுகின்றது.
சுமார் 130,000 உறுப்பினர்களைக் கொண்ட அரச மலேசிய அரச போலீஸ் படை, நாடு முழுவதும் குற்றச்செயல்களை ஒடுக்குவதிலும், பொது ஒழுங்கு பேணப்படுவதை உறுதி செய்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
அதோடு, மலேசியர்களின் தொடர்ச்சியான பாதுகாப்பை உறுதி செய்வதிலும் அப்படை முக்கிய தூணாக பங்காற்றி வருகின்றது.
ரோந்துப் பணிகள், நவீன தொழில்நுட்பப் பயன்பாடு மற்றும் சமூகத்துடனான நெருங்கிய ஒத்துழைப்பு போன்ற பல்வேறு முன்னெடுப்புகளின் மூலம், கடந்த பத்தாண்டுகளில் மலேசியாவில் குற்ற விகிதம் கணிசமான சரிவைக் கண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தேசம் காத்திடும் கடமை வீரர்களில் சமுதாயத்தை பிரதிநிதிக்கும் இந்திய போலீசாரை பார்க்கும் போதே, பெருமித உணர்வு பெருக்கெடுக்கும்.
இன்று நாட்டு மக்கள் அனைவரும் அனுபவிக்கும் அமைதி, போலீசாரின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பாகும் என்பதால், தேசத்திற்காக உழைக்கும் அவர்களை என்றும் போற்றுவோம்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]