பொது

மாற்றுத்திறனாளியிடம் பாலியல் வன்கொடுமை; ஆடவருக்கு பத்தாண்டுகள் சிறை, 5 பிரம்படி

27/03/2026 02:09 PM

ஜோகூர் பாரு, 27 மார்ச் (பெர்னாமா) -- மாற்றுத்திறனாளிப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட பாதுகாவலர் ஒருவருக்கு, இன்று, ஜோகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ஐந்து பிரம்படிகளும் விதித்து தீர்ப்பளித்தது.

ஆர். சிவனேசனுக்கு அத்தண்டனையை விதித்த நீதிபதி Madihah Zainol, சிறைக்காலம் முழுவதும் மனநல ஆலோசனை பெறவும், தண்டனைக் காலம் முடிந்த பின்னரும் போலீசாரின் கண்காணிப்பில் இருக்கும்படியும் உத்தரவிட்டார்.

கடந்த ஜனவரி 30-ஆம் தேதி, இரவு மணி 11.50 அளவில், இஸ்கண்டார் புத்ரி மாவட்டத்தில் உள்ள ஸ்கூடாயில் தமக்கு தெரிந்த, செவி, பேச்சுத் திறன் மற்றும் கற்றல் குறைபாடுகள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளியான 29 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த ஆடவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், பத்து ஆண்டுகளுக்குக் குறையாத மற்றும் முப்பது ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறைத்தண்டனை மற்றும் பிரம்படியும் விதிக்க வகைச் செய்யும் குற்றவியல் சட்டம், செக்‌ஷன் 376(2)(K)-வின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டது.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]