புத்ராஜெயா, 27 மார்ச் (பெர்னாமா) -- ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்த முயற்சிகள், கருணை மற்றும் சகோதரத்துவத்தின் அடிப்படையில் நீடித்த நிலைத்தன்மையாக மாறும் என்று மலேசியா நம்பிக்கைக் கொண்டுள்ளது.
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் ஆப்கானிஸ்தானின் இடைக்காலப் பிரதமர் முல்லா முஹமட் ஹசான் அக்குந் ஆகியோருக்கு இடையிலான தொலைபேசி உரையாடலில் இவ்விவகாரம் எழுப்பப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் தற்போதைய அதிகாரத் தரப்பினரை அங்கீகரிக்கும் விவகாரத்தை மதிப்பிடுவதில், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, ஓ.ஐ.சி மூலம் மலேசியா தொடர்ந்து தீவிர பங்களிக்கும் என்று, Datuk Seri Anwar இன்று தமது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
கல்விக்கான அணுகுமுறையை உறுதி செய்வதோடு, நீதி, அனைவரையும் உட்படுத்துதல் மற்றும் பெண்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாத்தல் ஆகிய கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
கொள்கைக்கும் நடைமுறைக்கும் இடையிலான சமநிலையை மையமாகக் கொண்டு மலேசியாவின் அணுகுமுறை அமைந்துள்ளது.
அதாவது, உலகின் பதற்றமான சூழலில் நம்பிக்கையை ஏற்படுத்துவது, தன்னம்பிக்கையை வளர்ப்பது உட்பட அமைதிக்கான கருவியாகத் தலைமைத்துவத்தை வெளிப்படுத்துதலாகும்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]