அரசியல்

தே.மு-உடன் நீடிக்கும் ம.இ.கா முடிவு; முதிர்ச்சியின் அடையாளம்

26/03/2026 05:39 PM

கோலாலம்பூர், 26 மார்ச் (பெர்னாமா) -- தேசிய முன்னணியுடன் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டும் என்ற ம.இ.கா மத்திய செயற்குழுவின் முடிவு, அக்கட்சியின் விசுவாசம் மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட அரசியல் முதிர்ச்சியின் அடையாளமாகக் காணப்படுகிறது.

இந்த முடிவானது, கூட்டணி காலத்திலிருந்து கட்டமைக்கப்பட்டு, பின்னர் தேசிய முன்னணி மூலம் வலுப்படுத்தப்பட்ட போராட்ட வரலாற்றையும் பிரதிபலிப்பதாகக் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சம்ரி அப்துல் காடிர் தெரிவித்தார்.

இந்த நீண்ட காலகட்டத்தில், இனரீதியான சவால்கள், அரசியல் அழுத்தம், தேசிய நிலப்பரப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் என தேசிய முன்னணி பல்வேறு சோதனைகளை எதிர்கொண்டுள்ளது.

ஆயினும், நம்பிக்கை, விசுவாசம் மற்றும் பகிரப்பட்ட பொறுப்பு ஆகியவையே அதன் அடித்தளமாக இருப்பதால் அக்கட்சியும் மீள்திறனுடன் நிலைத்து நிற்பதாக டத்தோ ஶ்ரீ டாக்டர் சம்ரி கூறினார்.

VIS MIC 1-8
நிலைத்தன்மை மற்றும் தொடர்ச்சி, பல்லினங்களிடையே காணப்படும் ஒற்றுமை, தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும் ஆற்றல் மற்றும் பிளவுபடுத்தும் அரசியலை நிராகரித்தல் ஆகிய நியாயமான காரணங்களுடன், ம.இ.கா 
தொடர்ந்து தேசிய முன்னணியோடு நிலைத்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

நிச்சயமற்ற அரசியல் சூழலில், மக்களுக்கு ஒரு நிலையான மற்றும் அனுபவம் வாய்ந்த தளம் தேவை என்றும், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நடைமுறைக்கு ஏற்ற நிர்வாகத்தின் மூலம் தேசிய முன்னணி ஏற்புடைய கூட்டணி எனவும் சம்ரி குறிப்பிட்டார்.

அது கட்சிகளின் கூட்டணி மட்டுமல்ல. மாறாக, அது தேசிய நல்லிணக்கத்தைப் பேணுவதில் நிரூபிக்கப்பட்ட இனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பின் ஒரு முன்மாதிரியாகும் என்றும் அவர் விவரித்தார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]