பொது

15 ஆண்டுகளில் 3,000 பட்டதாரிகளை உருவாக்கியிருக்கும் மைஸ்கில்ஸ் அறவாரியம்

29/03/2026 05:27 PM

களும்பாங், மார்ச் 29 (பெர்னாமா) -- ஏட்டுக் கல்வியில் பின்தங்கிய மாணவர்களின் இருண்ட எதிர்காலத்தை கைத்திறன் தொழில் பயிற்சியின் மூலமாக மீட்டெடுக்கும் அரும்பணியை ஆற்றி வரும் மைஸ்கில்ஸ் அறவாரியம், தொடங்கிய 15 ஆண்டுகளில் மூவாயிரம் பட்டதாரி மாணவர்களை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.

பல்வேறு குடும்பப் பின்னணியை மாணவர்களை கொண்டிருப்பதால் இப்பயிற்சியுடன் நல்லொழுக்கம், மரியாதை ஆகிய நன்னெறிப் பண்புகளையும் கற்றுக் கொடுப்பதே அறவாரியத்தின் தலையாய நோக்கம் என்கிறார் அதன் தோற்றுநர் வழக்கறிஞர் பசுபதி சிதம்பரம்.

"இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு மாணவர்கள் இங்கு தங்கி பயிற்சி பெறுவார்கள். பின்னர் அவர்களுக்கு 17,18 வயது கடந்ததும் அவர்கள் இங்கிருந்து வெளியேறி தங்களின் கைத்திறனுக்கேற்ப தொழிற்கல்வியை விரிவாகப் பயிலவோ அல்லது வேலை செய்யவோ வெளியேறி விடுவார்கள். அவர்களுக்கான வேலை வாய்ப்பினையும்  அறவாரியமே ஏற்படுத்திக் கொடுகிறது. மேலும் இங்குள்ள 35 பெண்களுக்கு அலுவலகப் பணி குறித்த அடிப்படைப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றனர். தங்குமிடம், உணவு, திறன் பயிற்சி என அனைத்துமே அவர்களுக்கு இலவசமாக அளிக்கப்படுகின்றது," என்றார் அவர்.

பத்து இயக்குநர்களைக் கொண்டு வழிநடத்தப்படும் மைஸ்கில்ஸ் அறவாரியத்தின் அனைத்து முயற்சிகளுக்கும் அரசாங்கத்துடன், ஆயிரத்திற்கும் மேற்பட்ட நன்கொடையாளர்கள் பல்வேறு வகையில் தங்களின் ஆதரவை இதுநாள் வரையில் அளித்து வருவதாகவும் அவர் கூறினார்.

நேற்று சிலாங்கூர், களும்பாங்கில் உள்ள மைஸ்கில்ஸ் அறவாரியத்திற்கு வருகைப் புரிந்திருந்த டாமன்சாரா ரோட்டரி கிளப், மாணவர்களின் வளர்ச்சிக்காக ஒரு லட்சம் ரிங்கிட் நிதியை வழங்கி இருந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)