விளையாட்டு

ராவணா கிண்ண கபடிப் போட்டி; பிளேக் பெந்தர்ஸ் அணி வாகை

29/03/2026 05:41 PM

கெப்போங், மார்ச் 29 (பெர்னாமா) -- கோல்டன் கிங்டம் நிறுவனம், சிலாங்கூர் மாநில நலவாழ்வு, பொழுதுபோக்கு விளையாட்டு மன்றம் ஆகியவற்றுடன் பிளேக் பெந்தர்ஸ்  கபடி கிளப் ஏற்பாடு செய்திருந்த ராவணா கிண்ண கபடிப் போட்டி நேற்று கெப்போங்கில் நடைபெற்றது.

உடல் பலத்துடன் சிந்தனைத் திறனையும் வளர்க்கும் இந்தியர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான இப்போட்டில் பிளேக் பெந்தர்ஸ் அணியினர் முதல் நிலையில் வெற்றி பெற்றிருந்தனர்.

பல்வேறு தடைகளைக் கடந்து மிகவும் சவாலான முறையில் நடைபெற்ற இப்போட்டிக்கு சுற்றுவட்டார இந்திய இளைஞர்களிடமிருந்து  கிடைத்திருக்கும் அமோக ஆதரவைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டுகளில் இன்னும் விரிவான முறையில் இப்போட்டியை நடத்த தாம் திட்டமிட்டுள்ளதாக இப்போட்டிக்கான விதிமுறைக் கண்காணிப்பாளரான டஷ்வினன் லெட்சுமணன் தெரிவித்தார். 

மேலும் வெற்றி பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுகளுடன், தேந்தெடுக்கப்பட்ட சிறந்த மூன்று ஆட்டக்காரர்கள் குறித்தும் அவர் கூறினார்.

"இப்போட்டியில் மொத்தம் நான்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதலாவது இடத்தை அடைந்த பிளேக் பெந்தர்ஸுக்கு மூவாயிரம் ரிங்கிட் காசோலையும் கோப்பையும் வழங்கப்பட்டது. இரண்டாவது நிலையில் வெற்றி பெற்ற சிலாங்கூர் ரெட் ஜெயின்ட் குழுவிற்கு 1,800 ரிங்கிட்டிற்கான காசோலையும் வெற்றிக் கோப்பையும் வழங்கப்பட்டது. மூன்றாவது இடத்தை தக்க வைத்து கொண்ட கிள்ளான் ஸ்டார் குழுவிற்கு 800 ரிங்கிட்டிற்கான காசோலையும் பரிசும் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சுகனேசன், பாலு, ஐசெக் ஆகியோரின் சிறந்த விளையாட்டுத் திறனுக்கும் தனித்தனி பரிசுகள் வழங்கப்பட்டன," என்றார் அவர். 

இப்போட்டில் மொத்தம் 16 குழுக்கள் பங்கேற்றிருந்தன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)