பொது

நில அமிழ்வு சம்பவத்தின் தொழில்நுட்ப அறிக்கை 3 மாதங்களுக்குள் தயாராகும்

07/09/2024 06:35 PM

கோலாலம்பூர், 07 செப்டம்பர் (பெர்னாமா) -- மனித நடவடிக்கைகள், வானிலை மற்றும் சம்பந்தப்பட்ட பகுதியில் நிலத்தடி மண் அரிப்பு ஆகிய காரணங்களால் கோலாலம்பூர் மஸ்ஜிட் இந்தியாவில் நில அமிழ்வு சம்பவம் நிகழ்ந்ததாக பல்வேறு நிறுவனங்கள் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், கோலாலம்பூர் மாநகராண்மைக் கழகம், டி.பி.கே.எல் தலைமையிலான மஸ்ஜிட் இந்தியா தரை கட்டமைப்பு பணிக்குழுவால் விசாரணையின் முடிவுகள் குறித்த தொழில்நுட்ப அறிக்கை மூன்று மாதங்களுக்குள் தயாரிக்கப்படும் என்று இயற்கைவளம் மற்றும் இயற்கை நிலைத்தன்மை அமைச்சு, என்.ஆர்.ஈ.எஸ் தெரிவித்திருக்கிறது.

கண்காணிப்பு, பராமரிப்பு, நடைமுறைகள் மற்றும் நிலத்தடி ஆய்வு ஆகியவற்றை வலியுறுத்துவதாக என்.ஆர்.ஈ.எஸ் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

நிலத்தடியில் உள்ள கட்டமைப்புகள் உட்பட, நிலச்சரிவுகள் மற்றும் நில அமிழ்வு ஏற்படும் இடங்களை கண்டறிந்து தவிர்க்கவும் இந்த தொழில்நுட்ப அறிக்கை உதவும் என்று அந்த அமைச்சு கூறியது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ஆம் தேதி, ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் ஏற்பட்ட நில அமிழ்வில் விழுந்த ஜி.விஜயலட்சுமி எனும் இந்திய பிரஜையை காணவில்லை.

அதன் பிறகு, ஒன்பது நாள்களுக்கு மேற்கொள்ளப்பட்ட தேடல் மற்றும் மீட்புப் பணி, பாதுகாப்பு கருதி ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் நிறுத்தப்பட்டது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]