பொது

ஜோகூரில் இரசாயன காற்று தூய்மைக்கேடு சம்பவம் தொடர்பில் இருவர் கைது

10/09/2024 07:09 PM

ஜோகூர் பாரு, 10 செப்டம்பர் (பெர்னாமா) -- ஜோகூர் மாநிலத்தில், ஜோகூர் பாரு மற்றும் கோத்தா திங்கியில் இரசாயன காற்று தூய்மைக்கேடு சம்பவம் தொடர்பில் நேற்றிரவு சந்தேகத்தின் பேரில் இரண்டு உள்நாட்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.

லாரி ஓட்டுநரும் அவரின் உதவியாளருமான 23 மற்றும் 28 வயதுடைய அவ்விரு ஆடவர்களும், ஜோகூர் பாருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இரவு மணி 11 அளவில் கைதானதாக ஜோகூர் பாரு செலாத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபு ரவுப் செலாமாட் தெரிவித்தார்.

அவ்விரு ஆடவர்கள் மீது, பழைய குற்றவியல் வழக்குகள் எதுவும் இல்லை என்பதும் போதைப்பொருளுக்கு அவர்கள் அடிமையாகாததும் பரிசோதனையில் தெரிய வந்ததாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.

குற்றவியல் நடைமுறை சட்டம், செக்‌ஷன் 117-இன் கீழ், இன்று தொடங்கி செப்டம்பர் 16ஆம் தேதிவரை ஏழு நாள்களுக்கு அவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 430-இன் கீழ் இவ்வழக்கின் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில், தகவல் தெரிர்ந்தவர்கள் ஜோகூர் பாரு செலாத்தான் மாவட்ட போலீஸ் தலைமையகத்தை 07-2182323 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)