பொது

தொண்டு இல்லங்களில் இருந்து காப்பாற்றப்பட்ட 392 சிறுவர்களுக்கும் சுகாதார பரிசோதனை

17/09/2024 06:15 PM

கோலாலம்பூர், 17 செப்டம்பர் (பெர்னாமா) -- 'Global Ikhwan Service and Business' நிறுவனத்திற்கு சொந்தமான தொண்டு இல்லங்களில் இருந்து காப்பாற்றப்பட்ட 392 சிறுவர்களுக்கும் சுகாதார பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு விட்டது.

அவர்களில், 202 ஆண்கள் மற்றும் 190 பெண்கள் ஆவர்.

பாதிக்கப்பட்டவர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பாதிப்பை எதிர்நோக்கி உள்ளதால், அவர்களை மேல் பரிசோதனை செய்ய வேண்டி இருப்பதை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியதாக தேசிய போலீஸ் படை தலைவர் டான் ஶ்ரீ ரசாருடின் ஹுசேன் தெரிவித்தார்.

''முதலாவது உடல் மற்றும் மனதளவில் கொடுமைகளை எதிர்கொண்டுள்ளனர். அவர்கள் அடி, பிரம்படி, கழுத்து நெறிக்கப்பட்டு துன்புறுத்தல்களை எதிர்கொண்டது தொடர்பில் நேற்று முன்தினம் முதல் பரவலாக பகிரப்பட்டது நமக்குத் தெரியும். மற்றொன்று என்னவென்றால் குழந்தை வளர்ப்பு. அவர்களை வளர்க்கும் விதம். அதைத் தவிர்த்து, குழந்தை தொழிலாளர்களும் உள்ளனர்,'' என்றார் அவர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனை ஏற்படும் அளவிற்கு அவர்கள் புறக்கணிப்பட்டிருப்பதை ரசாருடின் சுட்டிக்காட்டினார்.

இதுவரை, ஒன்றிலிருந்து 10 வயதுடைய 149 சிறுவர்கள், 2001ஆம் ஆண்டு சிறுவர்கள் சட்டம், செக்‌ஷன் 25 (2)-இன் கீழ், சமூகநல பராமறிப்பில் உள்ளதோடு, பாதுகாப்பான ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

எஞ்சிய 243 சிறுவர்கள் இன்னும் கோலாலம்பூர் போலீஸ் பயிற்சி மையம், புலாபோலில் உள்ளதோடு, கட்டம் கட்டமாக பராமரிப்பு மையங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)