சிறப்புச் செய்தி

இரும்புச் சத்து குறைந்தால் ஏற்படும் அறிகுறிகள்; அதனை அதிகரிக்கும் வழிவகைகள்

18/09/2024 08:03 PM

கோலாலம்பூர், 18 செப்டம்பர் (பெர்னாமா) -- மனித உடலுக்கு இரும்புச் சத்து அத்தியாவசியமான ஒன்று.

இரத்த சிவப்பு அணுக்களில் உள்ள 'ஹிமோகுலோபின்' (hemoglobin) எனப்படும் ஒரு வகை புரத உற்பத்திக்கு பிரதானமாக அமையும் இரும்புச் சத்தில் குறைபாடு ஏற்படும் பட்சத்தில் இரத்த சோகை மற்றும் மூச்சுத் திணறல் போன்ற உபாதைகளுக்கு வழிவகுக்கிறது.

உடலில் இரும்புச் சத்து குறைந்தால் ஏற்படும் சில அறிகுறிகளையும் அதனை அதிகரிக்க உதவும் சில வழிவகைகளையும் தொடர்ந்து காண்போம்.

சுவாசிக்கப்படும் ஆக்சிஜன் எனப்படும் பிராணவாயு உடல் முழுவதும் செல்வதை உறுதிச் செய்வதற்கு இரும்புச் சத்து பங்கு வகிப்பதாக மருத்துவ நிபுணர் டாக்டர் சத்திஸ் பாபு சுப்ரமணியம் விவரிக்கின்றார்.

''நம் உடலுக்கு நாம் சுவாசித்த பிராணவாயுவை எப்படி சேர்ப்பது? அதற்கு 'ஹிமோகுலோபின்' தேவை. 'ஹிமோகுலோபின்' என்பது ஒரு வகை புரதம். நம் நுரையீரலிலிருந்து பிராணவாயுவை எடுத்து நம் உடலின் பிற அணுக்கலுக்கும் உறுப்புகளுக்கும் அனுப்புகிறது. அதே போல, 'மயோகுலோபின்' (myoglobin) நம் தசைகளுக்கு பிராணவாயுவை அனுப்புகிறது. நாம் வழக்கம்போல செயல்படுவதற்கும் இரும்புச் சத்து பங்களிக்கிறது,'' என்றார் அவர்.

எனவே, உடலில் இரும்புச் சத்தும் குறைந்தால் உடல் சோர்வு, எளிதில் பலவீனம் அடைதல், எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும் என்று டாக்டர் சத்திஸ் பாபு கூறினார்.

அதோடு, மன அழுத்தம் ஏற்படும் சாத்தியம் இருப்பதோடு மூளை மற்றும் இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் இது வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

''முடி கொட்டும். மன அழுத்தம் ஏற்படும். அமர்ந்திருக்கும்போது கால் ஆடிக்கொண்டே இருக்கும். இதனை 'restless leg syndrome' என்று சொல்வார்கள். சிலருக்கு ஞாபக மறதி போன்ற மூளை சார்ந்த நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இரும்புச் சத்து குறையும்போது இரத்த சோகை (anemia) ஏற்படுகிறது. இதனால், இருதய துடிப்பு வேகமாக இருப்பது, மாரடைப்பு மற்றும் இருதய செயலிழப்பு போன்றவையும் உண்டாகுகின்றன,'' என்றார் அவர்.

இரும்புச் சத்து குறைப்பாட்டை ஓர் அடிப்படை இரத்த பரிசோதனையின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று டாக்டர் சத்திஸ் பாபு குறிப்பிட்டார்.

அதாவது, ஃபெரிட்டின் (ferritin) எனப்படும் இரத்தத்தில் உள்ள ஒரு வகை புரதத்தின் அளவைக் கொண்டே இரும்புச் சத்தில் குறைபாடு உள்ளதா இல்லையா என்பதை கண்டறிந்து அதற்கு ஏற்றாற்போல் சிகிச்சையளிக்கலாம்.

எனினும், உட்கொள்ளும் உணவு வகைகளின் மூலமாகவும் இரும்புச் சத்தை அதிகரிக்க முடியும் என்றும் அவர் தெளிவுப்படுத்தினார்.

''இரும்புச் சத்து இரு வகை உண்டு. ஹீம் (heme) இரும்புச் சத்து. அதாவது இறைச்சி வகைகளில் கிடைக்கும் இரும்புச் சத்து. மற்றொன்று, 'non-heme' இரும்புச் சத்து. அதாவது, காய்கறி, பழங்கள் மற்றும் தானிய வகைகளிலிருந்து கிடைக்கும் இரும்புச் சத்து. நம் உடலுக்கு அதிகமாக ஹீம் இரும்புச் சத்தே தேவைப்படுகிறது. இன்னும் அதிகமான இரும்புச் சத்து தேவையெனில் உணவு உண்பதற்கு முன்பதாக வைட்டமின் C-உள்ள பழ வகைகளை உண்பது மிகவும் சிறப்பு,'' என்றார் அவர்.

அதுமட்டுமின்றி, தேனீர் மற்றும் coffee இரும்புச் சத்தை பெருமளவு குறைக்கும் என்பதால் அவற்றை முடிந்தளவு தவிர்க்குமாறும் அவர் வலியுறுத்தினார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]