பொது

பட்டதாரிகளை தொழில்துறைக்கு தயார்படுத்தும் முயற்சிகள்

18/09/2024 06:38 PM

கோலாலம்பூர், 18 செப்டம்பர் (பெர்னாமா) -- தொழில்துறை மற்றும் உயர்கல்வி கழகங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பின் மூலம், பட்டதாரிகளை தொழில்துறைக்கு தயார்படுத்தி அவர்களின் திறனை மேம்படுத்த முடியும்.

அதில் ஒன்றாக, மலேசியத் தேசிய பல்கலைக்கழகத்தின் வணிகத் துறையில் பயிலும் மாணவர்களும், மலேசிய ஸ்குவாட் சங்கமும் இணைந்து அண்மையில் சுகாதார நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். 

கோலாலம்பூரில் உள்ள பேரங்காடி ஒன்றில் இந்த Jom Sihat Karnival Kesihatan எனும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது

இந்நிகழ்ச்சியில் மேற்கொள்ளப்பட்ட இரத்த தானம் வழி, 300 பாட்கேட் இரத்தம் சேகரிக்கப்பட்டதாக மலேசிய ஸ்குவாட் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஆர். பிரேம கண்ணன் தெரிவித்தார். 

''தேசிய இரத்த மையத்தை நாங்கள் அடிக்கடி தொடர்பு கொண்டு இரத்தக் கையிருப்பு குறித்து அறிந்து கொள்வோம். எந்த மாநிலங்களில் இரத்தக் கையிருப்பு குறைவாக இருக்கிறதோ, அந்த மாநிலங்களில் இரத்த தானம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வோம். அதற்கு மக்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள்,'' என்று அவர் கூறினார்.

தேசிய புற்றுநோய் மன்றமும், Medihub சிகிச்சையகமும் இலவச சுகாதார பரிசோதனையை மேற்கொண்டன.

இரண்டு நாள்களுக்கு நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், சுகாதாரத்தைப் பேணி காப்பது உட்பட மக்களிடையே சமூக விழிப்புணர்வை அதிகரிக்க பல்வேறு அம்சங்கள்  இடம் பெற்றிருந்தன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)