பொது

அமைச்சுகள் & அரசாங்க நிறுவனங்களை உட்படுத்திய வெளிநாட்டுப் பயணங்களுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சின் அனுமதி வேண்டும்

20/09/2024 06:20 PM

பூச்சோங், 20 செப்டம்பர் (பெர்னாமா) -- அமைச்சுகள் மற்றும் அரசாங்க நிறுவனங்களை உட்படுத்திய திட்டங்கள், பயணங்கள் மற்றும் வெளிநாட்டுப் பணிகள் அனைத்தும், அந்தந்தத் துறையின் தலைமைச் செயலாளர் அல்லது தலைவர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சரின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாகக் கூறினார்.

அரசாங்க நிறுவனங்களில் உள்ள சில நிர்வாக வாரியம் தங்களின் சுயநலன்களுக்கு ஆதரவாக முடிவுகள் எடுப்பதால், அம்முடிவு எடுக்கப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார்.

இவ்விவகாரத்தில் அரசாங்கம் மிகவும் கண்டிப்பாக இருப்பதாகக் கூறிய நிதி அமைச்சருமான டத்தோ ஶ்ரீ அன்வார், ஜெர்மனி, பெர்லினில் நடைபெறும் சிறிய கண்காட்சி ஒன்றில் கலந்து கொள்வதற்கு ஓர் அமைச்சு மற்றும் அரசாங்க நிறுவனம் ஒன்றின் 68 பேர் அடங்கிய குழு செய்த விண்ணப்பத்தை தாமே நிராகரித்ததாகத் தெரிவித்தார்.

''ஒரு சிறிய பகுதியினர் ஈடுபடலாம்; அவர்களுக்கு தேவைப்படலாம். விமான பயணச் சீட்டு மற்றும் தங்கும் விடுதிகள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அதனை ரத்துச் செய்யும் உறுதியான முடிவு எடுத்தேன். இது மக்களின் பணம். நாங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். நேற்று நான் அரசாங்கத் தலைமைச் செயலாளர், அனைத்து தலைமைச் செயலாளர்கள் மற்றும் அனைத்து தலைமை இயக்குநர்களையும் சந்தித்து இது குறித்து தெரிவித்து அவர்களின் ஒத்துழைப்பை கோரினேன்,'' என்றார் அவர்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]