பொது

மாற்றுத்திறனாளி தாக்கப்பட்ட விவகாரம் விசாரிக்கப்படுகிறது; நிறுத்தப்படவில்லை - பிரதமர்

20/09/2024 07:27 PM

பூச்சோங், 20 செப்டம்பர் (பெர்னாமா) -- இ-ஹெய்லிங் ஓட்டுநரான மாற்றுத்திறனாளி ஒருவரை உயர் அந்தஸ்து கொண்ட நபர் ஒருவரின் உதவியாளர் தாக்கியதாகக் கூறப்படும் குற்றப்பதிவின் வழக்கை போலீஸ் தரப்பு மூடியதாகக் கூறப்படுவதை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நிராகரித்தார். 

இது தொடர்பிலான விசாரணையை மேற்கொள்ள போலீசாருக்கு கால அவகாசம் தேவைப்படுவதால் பொதுமக்கள் அதற்கு வழிவிட வேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார். 

இவ்விவகாரத்தில் பிரதமரை தலையிடும்படி மாற்றுத்திறனாளிகள், தன்னார்வலர்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் உட்பட இ-ஹெய்லிங் பணியாளர்கள் அடங்கிய 200 பேர் கொண்ட குழு ஒன்று கேட்டுக்கொண்டதாக செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. 

இது தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அவர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். 

அதுமட்டுமின்றி, இதில் பாதிக்கப்பட்ட ஒங் இங் கியோங் எனும் நபரையும் தாம் அளித்த புகாரை மீட்டுக்கொள்ளும்படி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. 

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]