விளையாட்டு

ஒலிம்பிக் போட்டியில் இடம்பெறும் நான்கு விளையாட்டுகளில் அமைச்சு கவனம் செலுத்தும்

15/11/2024 06:58 PM

கோலாலம்பூர், 15 நவம்பர் (பெர்னாமா) -- ஒலிம்பிக் போட்டியில் இடம்பெறும் நான்கு விளையாட்டுகளில் புதிய விளையாட்டாளர்களை அடையாளம் காணும் பொருட்டு, அடுத்த ஆண்டு தொடங்கி இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு கவனம் செலுத்தும்.

எடை தூக்குவது, அம்பெய்தல், தேக்வாண்டோ மற்றும் குறி சுடுதல் ஆகியவையே அந்த நான்கு விளையாட்டுகளாகும் என்று அமைச்சர் ஹன்னா யோ தெரிவித்தார்.

அந்த நான்கு விளையாட்டுகளில் திறமையான புதிய விளையாட்டாளர்களை அடையாளம் காண நிதி அமைச்சு கூடுதலாக 10 லட்சம் ரிங்கிட் வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் கூறினார்.

இதுவரை ஒலிம்பிக் போட்டிகளில் இந்த நான்கு விளையாட்டுகளும் நாட்டிற்கு எந்தவொரு பதக்கத்தைப் பெற்றுத் தரவில்லை என்று ஹன்னா குறிப்பிட்டார்.

"இந்த விளையாட்டுகளை மேம்படுத்த நாங்கள் நிதி அமைச்சிடம் கூடுதல் நிதி ஒதுக்கீடு கேட்டுள்ளோம். அந்த கூடுதல் ஒதுக்கீடு அடுத்த ஆண்டு வழங்கப்படவுள்ளது," என்று அவர் தெரிவித்தார்.

மேலும், சைக்கிளோட்ட விளையாட்டிலும் புதிய விளையாட்டாளர்களை அடையாளம் காணும் தேவை உள்ளதாகவும், முக்குளிப்பு போட்டியில் அதிகமாக மகளிர் ஈடுபட ஊக்குவிக்கப்படுவதாகவும் ஹன்னா கூறினார்.

தேசிய அணியில் தற்போதுள்ள பெண் முக்குளிப்பு  வீரர்கள் பட்டியலின் அடிப்படையில், டத்தோ பண்டேலேலா ரினோங் மற்றும் நூர் டபிதா சப்ரி மட்டுமே இதுவரை ஒலிம்பிக் அரங்கில் போட்டியிட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

வியாழக்கிழமை, 2024 ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் பங்கு கொண்ட தேசிய விளையாட்டாளர்களின் அடைவு நிலை தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், ஹன்னா செய்தியாளர்களிடம் பேசினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)