கோலாலம்பூர், 19 நவம்பர் (பெர்னாமா) -- பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கத்தின் இரண்டாம் நிறைவாண்டு இம்மாதத்தில் கொண்டாடப்படவிருக்கிறது.
மக்கள் நலன்களை மையமாகக் கொண்ட அரசாங்கத்தின் இலக்குகள் மற்றும் முயற்சிகள் குறித்த விழிப்புணர்வை மேலும் அதிகரிக்கச் செய்யும் நோக்கத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் இதில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஒருமைப்பாட்டு துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்தார்.
வரும் நவம்பர் 22 தொடங்கி 24-ஆம் தேதி வரையில் கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில், Madani di Hati, Rakyat Disantuni எனும் கருப்பொருளில் அந்நிகழ்ச்சி நடத்தப்படவிருப்பதாக செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.
''ஒரு நாட்டில் நல்லிணக்கம், ஒருமைப்பாடு என்பது மிகவும் அவசியமான ஒன்று. அதனை முன்னெடுத்து செல்வதில் அமைச்சு கடந்த ஈராண்டுகளாக மேற்கொண்ட முயற்சிகள் அங்கே காட்சியகப்படுத்துகின்றோம். அதோடு, இளைய தலைமுறையினரை ஈர்க்கும் வகையிலும் பல நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன,'' என்றார் அவர்.
அம்மூன்று நாள்கள் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிகளில் ஒரு அங்கமாக, ஆபரணங்களை பொலிவாக்கும் தொழில்நுட்பமும் அங்கு காட்சிப்படுத்தப்படும்.
அங்கு வருகைப்புரியும் பொதுமக்கள், தங்களின் தங்க ஆபரணங்களை அத்தொழில்நுட்பத்தின் மூலம் இலவசமாக பொலிவாக்கவும் வாய்ப்பு வழங்கப்படுவதாக சரஸ்வதி விவரித்தார்.
மற்றொரு நிலவரத்தில், ஒருமைப்பாட்டு அமைச்சு கடந்த இரண்டு ஆண்டுகளில் மக்களிடையே நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் மேலோங்கச் செய்வதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக இந்து மதம் சார்ந்து சில அவதூறுகளும் மனதைப் புண்படுத்தும் வகையிலான கருத்துகளும் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருவதால், அவற்றை கையாள்வதற்கான வழிவகைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சரஸ்வதி கூறினார்.
''ஒரு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, சமய விவகாரம் மற்றும் அது தொடர்பான தீர்வுகளுக்காக அது அமைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில், இந்து சமயம் உட்பட எந்த சமயம் சார்ந்தோ அவதூறுகள் எழுந்தால் அது குறித்த இந்த நடவடிக்கை குழு விசாரணை நடத்தும். சுமூகமான தீர்வுக் காணும் நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது,'' என்றார் அவர்.
ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ், தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக ''jom membaca'' திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
''இளம் பிள்ளைகள், குறிப்பாக தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை இன்னும் அதிகரிக்க வேண்டும். குறைந்த மாணவர்கள் கொண்ட பள்ளிகளை அடையாளம் கண்டு அவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்ற சிந்தனையை மேற்கொண்டுள்ளோம்,'' என்றார் அவர்.
இன்று,பெர்னாமா தொலைக்காட்சியில் நேரடியாக ஒளியேறிய Apa Khabar Malaysia நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், பெர்னாமா தமிழ்ச் செய்திகளுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் போது சரஸ்வதி அத்தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]