காஜாங், 27 பிப்ரவரி (பெர்னாமா) -- மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் தொடர்பான அண்மையப் பிரச்சினைகள் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஓர் அரச விசாரணை ஆணையம், ஆர்.சி.ஐ அமைக்கப்பட வேண்டும் என்ற ஜ.செ.க-வின் கோரிக்கையை இன்று அமைச்சரவை விவாதித்ததாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அந்த விவாதங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கை பின்னர் வெளியிடப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
''நாங்கள் அதை நன்றாக விவாதித்தோம். பின்னர் ஒரு அறிக்கை வெளியிடப்படும். நாங்கள் அதை நன்றாக விவாதித்தோம்,'' என்றார் அவர்.
மஸ்ஜிட் ஜாமெக் பெக்கான் காஜாங்கில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு டத்தோ ஶ்ரீ அன்வார் செய்தியாளர்களிடம் அவ்வாறு கூறினார்.
எஸ்.பி.ஆர்.எம் சம்பந்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டை விசாரிக்க ஒரு ஆர்.சி.ஐ அமைக்கப்பட வேண்டும் என்று ஜ.செ.க பொதுச்செயலாளர் அந்தோணி லோக் இன்று அமைச்சரவைக் கூட்டத்தில் பரிந்துரைக்கவிருப்பதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
பட்டியலிடப்பட்ட பொது நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் பங்குதாரர்களை பதவி விலகச் செய்யவோ அல்லது தொடர்பில் இருக்கும் வணிகர்களின் வலையமைப்பிற்கு அதிக தள்ளுபடியில் தங்கள் பங்குகளை விற்கவோ அழுத்தம் கொடுக்கும் வகையில், எஸ்.பி.ஆர்.எம்-இன் மூத்த அதிகாரிகள் ஒரு அச்சுறுத்தல் நடவடிக்கைக்கு திட்டமிட்டது தொடர்பான குற்றச்சாட்டு அதுவாகும்.
எனினும், அக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள எஸ்.பி.ஆர்.எம், அது வணிகத் துறையில் சில தரப்பினருக்கு எதிரான விசாரணை மற்றும் அமலாக்க நடவடிக்கைகளின் நம்பகத்தன்மைக்குக் கலங்கத்தை ஏற்படுத்தும் முயற்சி என்று விவரித்தது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]