புத்ராஜெயா, 27 பிப்ரவரி (பெர்னாமா) -- உலக நாடுகளில் ஏறக்குறைய 22-இல், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான கபடி பிரதான விளையாட்டாக இருந்து வருகிறது.
கடந்தாண்டு நடைபெற்ற சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்து கலந்து கொண்ட மலேசிய கபடி அணி, தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களையும் குவித்து நாட்டிற்குப் பெருமை சேர்த்தது.
எனவே, இவ்விளையாட்டின் பெருமை குறித்து மலேசியர்கள் குறிப்பாக இந்திய சமூகத்தினர் முழுமையாக அறிந்து வைத்துக் கொள்வதுடன், உலகப் போட்டிகளிலும் கபடியைக் களமிறக்குவதற்காக அதன் விளையாட்டாளர்களை முழுமையாக ஆதரிக்கும் முயற்சியில், அரசாங்கம் தொடர்ந்து ஈடுபடுவதாகத் தேசிய ஒருமைப்பாட்டுத் துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்தார்.
சீ விளையாட்டுப் போட்டியைத் தொடர்ந்து, ஆசியான் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு அதிக பயிற்சிகளில் இவர்கள் ஈடுபட வேண்டியுள்ளது.
எனவே, தனியார் தரப்பினருடன் இணைந்து அரசாங்கமும் பொருளாதாரம் உட்பட அவர்களுக்குத் தேவையான இன்னும் பல உதவிகளை வழங்கும் என்றும் யுனேஸ்வரன் உறதி கூறினார்.
இதனிடையே, மலேசியாவில் கபடியைத் தொழில்முறை ரீதியில் மேம்படுத்துவதற்கான சிறப்பு வசதியுடன் கூடிய கபடி அரங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தமது தரப்பு இன்று துணையமைச்சரிடம் சமர்ப்பித்ததாக மலேசிய கபடி சங்கத் தலைவர் பீட்டர் கோபி தெரிவித்தார்.
சாதனைப் படைத்த மலேசியக் கபடி அணியை, நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்த யுனேஸ்வரன் அவர்களைக் கௌரவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)