உலகம்

புதுடெல்லியில் சுகாதார அவசரநிலை அறிவிக்கப்படும் சூழல் நிலவுகிறது

19/11/2024 05:18 PM

புதுடெல்லி, 19 நவம்பர் (பெர்னாமா) - இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் ஏற்பட்டுள்ள மிக மோசமான காற்றுத் தூய்மை கேட்டினால் அந்நகரில் சுகாதார அவசரநிலை அறிவிக்கப்படும் சூழல் நிலவி வருகிறது.

புது டெல்லியில் காற்றின் தரம் 1081-ஆக பதிவு செய்யப்பட்டு மிகவும் அபாயகரமான காற்று மாசாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

100 மீட்டருக்கு அப்பால் எதனையும் பார்க்க இயலாத சூழலில், மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கையை மேற்கொண்டு வருகின்றனர். 

பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் விவசாயக் கழிவுகள் பொது வெளியில் எறிக்கப்படுவதால், புதுடெல்லி காற்றுத் தூய்மை கேடு ஏற்படுவதாக அதன் முதலமைச்சர் அதிஷி மர்லேனா தெரிவித்தார்.

"இது ஏன் நடக்கிறது? ஏனெனில் விவசாயக் கழிவுகள் நாடு முழுவதும் எரிக்கப்படுகிறது. பஞ்சாப், ஹரியானா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் விவசாயக் கழிவுகளை எரித்து வருகின்றனர். ஆனால் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் மௌனம் சாதிக்கிறது. இன்று, ஒட்டுமொத்த வட இந்தியாவும் மருத்துவ அவசர நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது," என்றார் அவர்.

இதற்குக்குத் தீர்வு காண மத்திய அமைச்சு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

இம்முறை டெல்லியில் ஏற்பட்ட காற்று மாசுக்கு விவசாயக் கழிவுகளை எரிக்கும் நடவடிக்கை 40 விழுக்காடு பங்களித்திருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

மேலும், மிக மோசமான காற்றுத் தூய்மை கேட்டினால் அதிகரிக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சையங்கள் செயல்பட்டு வருகின்றன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)