பொது

பல்வேறு குற்றங்களுக்காக 6,646 போலீஸ் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

19/11/2024 06:13 PM

குவாந்தான், 19 நவம்பர் (பெர்னாமா) -- 2020-ஆம் ஆண்டு தொடங்கி இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வரை, பல்வேறு குற்றங்களுக்காக 6,646 போலீஸ் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதில் 613 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் 120 பேர் பதவி இறக்கம் கண்டுள்ளதாக தேசிய போலீஸ் படையின் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ அயூப் கான் மைடின் பிச்சை தெரிவித்தார்.

மேலும் 152 பேரின் ஊதிய உயர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நேர்மை, குற்றவியல், ஊழல் மற்றும் போதைப்பொருளை உட்படுத்திய குற்றச் செயல்களில் அவர்கள் ஈடுபட்டதாக அயூப் கான் குறிப்பிட்டார்.

"போலீஸ் உறுப்பினர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டால், அதனை என்னிடம் தெரிவிக்கலாம்.

"தகவல் அளிப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து, குற்றம் செய்த போலீஸ் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்," என்று அவர் தெரிவித்தார்.

இன்று குவாந்தானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் அயூப் கான் செய்தியாளர்களிடம் பேசினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)