பொது

மருந்து விலைப் பட்டியல்; மருந்து விலைகளைக் கட்டுப்படுத்த அல்ல

14/03/2025 06:23 PM

புத்ராஜெயா, 14 மார்ச் (பெர்னாமா) -- தனியார் மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சையகங்களில் மே முதலாம் தேதி தொடங்கி மருந்து விலைப் பட்டியலை பொதுவில் வைக்கும் உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது.

இந்த உத்தரவு, மருந்து விலைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும், மாறாக, கிடைக்கக்கூடிய மருந்துகளின் விலைகள் குறித்த தகவல்களை, பொதுமக்கள் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும், உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிசான் முஹமட் அலி தெரிவித்தார்.

விலை மற்றும் சுகாதார வசதிகளை ஒப்பிடவும், செலுத்த வேண்டிய கட்டணம் உட்பட செலவுகளைத் திட்டமிடவும் இந்த உத்தரவு உதவி செய்யும் என்று அவர் தெரிவித்தார்.

தகவல்களைப் பெறுவதற்கான உரிமை மற்றும் தேர்வு செய்யும் உரிமை உள்ளிட்ட பயனீட்டாளர்களின் உலகளாவிய உரிமைகளுக்கு ஏற்ப மருந்து விலைப்பட்டியலைக் காண்பிக்கும் நடவடிக்கை அமைந்திருப்பதாக அவர் விவரித்தார்.

''மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்த இந்த உத்தரவை நாங்கள் பின்பற்றப் போவதில்லை, இல்லை. இந்த உத்தரவு மருந்து விலைகளைக் கட்டுப்படுத்த அல்ல, விலைப்பட்டியலைக் கட்டாயமாக்குவதற்காகவே,'' என்று அவர் கூறினார்.

வெள்ளிக்கிழமை, புத்ராஜெயாவில் நடைபெற்ற பயனீட்டாளர்கள் தொடர்புடைய அரசு சாரா நிறுவனங்களுடனான தினத்தில் கலந்து கொண்ட பின்னர், அர்மிசான் அவ்வாறு கூறினார்.

சுகாதார சேவையில் விதிக்கப்படும் கட்டணங்களில் வெளிப்படைத்தன்மை இருப்பதை உறுதி செய்ய, தனியார் மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சையகங்களில் மே முதலாம் தேதி தொடங்கி மருந்துகளின் விலைப்பட்டியலை பொதுவில் வைக்கும் உத்தரவு அமல்படுத்தப்படும் என்று முன்னதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)