புத்ராஜெயா, 14 மார்ச் (பெர்னாமா) -- தம்மை சம்பந்தப்படுத்திய ஊழல் மற்றும் கள்ளப்பண பரிமாற்ற வழக்கின் விசாரணைக்கு உதவும் பொருட்டு, முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று, மீண்டும் புத்ராஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் தலைமையகத்தில் வாக்குமூலம் அளித்தார்.
பிற்பகல் மணி 3.30-க்கு தொடங்கிய வாக்குமூலப் பதிவு மாலை மணி 5.42 அளவில் நிறைவடைந்து, இஸ்மாயில் சப்ரி அங்கிருந்து வெளியேறியினார்.
மீண்டும் திங்கட்கிழமை வாக்குமூலப் பதிவு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, இன்று காலை மணி 8.46-க்கு, இஸ்மாயில் சப்ரி தமது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய, எஸ்.பி.ஆர்.எம் தலைமையகத்திற்குச் சென்றார்.
ஏறக்குறைய, நான்கு மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர், நண்பகல் 12.30 மணியளவில் அங்கிருந்து வெளியேறினார்.
2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2022-ஆம் ஆண்டு நவம்பர் வரையில், அவரது நிர்வாகத்தின் போது மேற்கொள்ளப்பட்ட அரசாங்க விளம்பரச் செலவு தொடர்பில், இவ்வாண்டு ஜனவரி முதல், எஸ்.பி.ஆர்.எம் இஸ்மாயில் சப்ரி மீதான விசாரணையைத் தொடங்கியது.
கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி, எஸ்.பி.ஆர்.எம்-இடம் அவர் தமது சொத்து அறிவிப்பை செய்ததோடு, பிப்ரவரி 19-ஆம் தேதி அந்த ஆணையத்திடம் விளக்கம் அளித்தார்.
இதனிடையே, அவரது நிர்வாகத்தின் கீழ் பணியாற்றிய நான்கு மூத்த அதிகாரிகளையும் எஸ்.பி.ஆர்.எம் கைது செய்தது.
அண்மையில் ஒரு சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பில், இஸ்மாயில் சப்ரிக்கு தொடர்புடையதாக நம்பப்படும் 17 கோடி ரிங்கிட் ரொக்கப் பணமும், 70 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள தங்க கட்டிகளும் கண்டெடுக்கப்பட்டதாக எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாக்கி கடந்த மார்ச் மூன்றாம் தேதி அறிவித்திருந்தார்.
விசாரணைக்கு உதவும் பொருட்டு, இதுவரை 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள 13 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)