சுபாங் ஜெயா, 08 ஏப்ரல் (பெர்னாமா) -- புத்ரா ஹைட்ஸ் எரிவாயு வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 55 பேருக்கு தலா ஒரு மோட்டார் சைக்கிள் இன்று இலவசமாக வழங்கப்பட்டது.
இந்த நிரந்தர உதவி, முதல் ஆண்டிற்கான வாகனப் பதிவு மற்றும் வாகன காப்புறுதி சேவையையும் உள்ளடக்கியது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்
''இது அவர்களுக்கு நிச்சயம் பெரிதும் உதவும் என்று நான் நம்புகிறேன். இதற்கு காரணம், இந்த மோட்டார் சைக்கிள் அவர்களுக்கு போக்குவரத்து சாதனம் மட்டுமின்றி, சிலருக்கு வருமானத்தை ஈட்டுவதற்கும் உதவலாம். எனவே, இது நிச்சயம் அவர்களுக்கு உதவும்,'' என்றார் அவர்.
ஒவ்வொரு மோட்டார் சைக்கிளும் 5,000 ரிங்கிட்டில் சிறப்பு விலையில் வாங்குவதற்கு, ஸ்பென்கோ நிறுவனம் மொத்தமாக 3 லட்சம் ரிங்கிட்டை நன்கொடையாக வழங்கியதாகவும் அந்தோணி லோக் கூறினார்.
அதேவேளையில், மோட்டார் சைக்கிளைப் பெற்ற ஒவ்வொருவருக்கும் சாலை போக்குவரத்து துறை, ஜேபிஜே தலா இரண்டு தலைக்கவசங்களையும் வழங்கியது.
இன்று சிலாங்கூர், சுபாங் ஜெயாவில் நடைபெற்ற தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கும் நிகழ்ச்சிக்குப் பின்னர், லோக் அத்தகவல்களைத் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)