பொது

தங்குவதற்கு பாதுகாப்பானது என்று உறுதி செய்யப்பட்ட பின்னரே குடியிருப்பாளர்கள் இல்லம் திரும்பினர்

10/04/2025 02:40 PM

கோலாலம்பூர், 10 ஏப்ரல் (பெர்னாமா) - கடந்த செவ்வாய்க்கிழமை சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்சில் நிகழ்ந்த எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் சேதமடைந்த வீடுகளில் 190, தங்குவதற்கு தற்போது பாதுகாப்பானது என்று அமலாக்கத் தரப்பினரால் உறுதி செய்யப்பட்டப் பின்னரே அதன் குடியிருப்பாளர்கள் தத்தம் இல்லங்களுக்கு திரும்பினர். 

தெனாகா நேஷனல் நிறுவனம் டிஎன்பி,  ஆயர் சிலாங்கூர் நிறுவனம், வேலைப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை, JKKP, பொதுப்பணித் துறை, சுபாங் ஜெயா மாநகராண்மை மன்றம், MBSJ, மற்றும் அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம் உட்பட 12 தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவை நேற்று வரை 487 வீடுகளில் பரிசோதனைகளை மேற்கொண்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர்  டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.   

அந்த எண்ணிக்கையில் 328 வீடுகள் பாதுகாப்பானது என்று உறுதிபடுத்தப்பட்ட நிலையில், 190 வீடுகளுக்கு அதன் குடியிருப்பாளர்கள் திரும்பியதாக பெர்னாமா தொடர்புகொண்டபோது அவர் அவ்வாறு கூறினார். 

அதேவேளையில், பாதிக்கப்பட்ட 306 வீடுகளுக்கு டிஎன்பி நிறுவனம் மின்சார சேவையை வழங்கியதாக அவர் குறிப்பிட்டார். 

அந்தப் பகுதி இன்னும் பலத்த போலீஸ் பாதுகாப்பில் இருப்பதாகவும், குடியிருப்பாளர்கள் மற்றும் சிறப்பு அனுமதி உள்ளவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்ட பகுதிக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதும் பெர்னாமா மேற்கொண்ட கண்ணோட்டத்தில் தெரிய வந்துள்ளது. 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)