பொது

புத்ரா ஹைட்ஸ்; 100 வாடகை வீடுகளுக்கான பதிவு இன்று முதல் திறப்பு

14/04/2025 05:38 PM

புத்ரா ஹைட்ஸ், 14 ஏப்ரல் (பெர்னாமா) - புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிலாங்கூர் வீடமைப்பு மற்றும் சொத்து வாரியம் LPHS வழி சிலாங்கூர் மாநில அரசாங்கம் தயார் செய்த 100 வாடகை வீடுகளுக்கான பதிவு இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.

மாதத்திற்கு 850 ரிங்கிட் வாடகைக்கு ஆறு மாதங்களுக்கு சிப்பாங், கோத்தா வாரிசானில் உள்ள 1,010 சதுர அடியிலான வீடுகள் வழங்கப்படுவதாக சிலாங்கூர் மாநில வீடமைப்பு மற்றும் பண்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ போர்ஹான் அமான் ஷா தெரிவித்தார்.

"கோத்தா வாரிசானில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் எல்.பி.எஸ்.எச் தரப்பு 100 வீடுகளை தயார் செய்துள்ளது. 1010 சதுர அடியிலான அந்த வீடுகள் 3 அறைகள், 2 குளியலறைகளைக் கொண்டுள்ளன. அவை புதிய வீடுகள். நாங்கள் எந்நேரத்திலும் தயாராக உள்ளோம். இன்று பதிவு செய்தால், அதற்கான செயல்முறைகள் மேற்கொள்ளப்பட்டு புதன்கிழமை சாவியை ஒப்படைத்து விடலாம். இந்த வீட்டில், மின்சாரம், குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு மின்விசிறி மற்றும் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன,'' என்றார் அவர்.

இன்று, புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசல் வளாகத்தில் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான தற்காலிக வீடுகள் விளக்கமளிப்பு நிகழ்ச்சியில் டத்தோ போர்ஹான்  அவ்வாறு குறிப்பிட்டார்.

இன்று தொடங்கி புதன்கிழமை வரை நான்கு நாட்களுக்கு காலை 10 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரை அப்பதிவு திறந்திருக்கும்.

வேலை செய்பவர்களுக்கு சனிக்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 3 மணி வரை பதிவு திறந்திருக்கும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)