தாப்பா, 12 ஏப்ரல் (பெர்னாமா) - வரும் ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இதில், தேசிய முன்னணி சார்பில் தாப்பா அம்னோ செயலாளர் டாக்டர் முஹமட் யுஸ்ரி பகிர் போட்டியிடும் வேளையில்...
பெரிக்காத்தான் நேஷனலை பிரதிநிதித்து தாப்பா தொகுதி தலைவர் அப்துல் முஹைமின் மாலி மற்றும் மலேசிய சோசலிச கட்சி PSM-இன் பொது செயலாளர் பவானி கன்னியப்பன் ஆகியோர் தேர்தல் களம் காண்கின்றனர்.
இன்று காலை பேராக் தாப்பாவில் உள்ள மெர்டேக்கா மண்டபத்தில் அம்மூவரும் தங்களது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.
இத்தேர்தலில் போட்டியிட அவர்கள் தகுதியுடையவர்கள் என்பதை தேர்தல் அதிகாரி ரெடாவுடின் அஹ்மாட் ஷோகிரி 10.30 அளவில் அறிவித்தார்.
"நான் வேட்புமனுக்களை சரி பார்த்தேன். சரிபார்த்த பின்னர், அவர்களின் எந்தவொரு வேட்புமனுவும் நிராகரிக்கப்படவில்லை,'' என்றார் அவர்.
அப்துல் முஹைமின் காலை மணி 9 அளவில் தமது வேட்புமனு பாரத்தை சமர்பித்த வேளையில், டாக்டர் முஹமட் யுஸ்ரி பகிர் காலை மணி 9.06-க்கும் அவரைத் தொடர்ந்து பவானி கே.எஸ் 9.15-கும் சமர்பித்தார்.
கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி, ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினரான 59 வயது இஷாம் ஷாஹாருடின் காலமானதை தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
நாட்டின் 15-வது பொதுத் தேர்தலில் ஆயர் கூனிங் சட்டமன்றத்திற்கு ஐந்து முனைப் போட்டி நிலவிய வேளையில், தாப்பா தொகுதியின் அம்னோ தலைவருமாகிய இஷாம் 2,213 பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)