இஸ்தானா நெகாரா ,16 ஏப்ரல் (பெர்னாமா) - மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் அழைப்பின் பேரில், நேற்று தொடங்கி மலேசியாவுக்கு மூன்று நாள்கள் பயணம் மேற்கொண்டிருக்கும் சீன அதிபர் ஸி ஜின்பெங்கிற்கு இஸ்தானா நெகாராவில் இன்று அதிகாரப்பூர்வ வரவேற்பு நல்கப்பட்டது.
காலை மணி 10.30 அளவில் வருகை தந்த அவரை சுல்தான் இப்ராஹிம் வரவேற்றார்.
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், துணைப் பிரதமர்கள் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி மற்றும் டத்தோ ஶ்ரீ ஃபாடில்லா யூசோஃப்புடன் அமைச்சரவை உறுப்பினர்களும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இஸ்தானா நெகாரா அணிவகுப்பு சதுகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி இரு நாடுளின் தேசிய கீதங்களுடன் தொடங்கியது.
அதனை தொடர்ந்து அரச மலேசிய இராணுவப் படையின் 21 குண்டுகள் முழங்கப்பட்டன.
அரச மலாய் இராணுவத்தின் அணிவகுப்பை ஸி ஜின்பெங் பார்வையிட்டார்.
இஸ்தானா நெகாராவில் உள்ள பிரதான மண்டபத்தில் சீன அதிபரும் இதர பிரதிநிதிகளும் மாமன்னருடன் அரசு விருந்துபசரிப்பில் கலந்து கொண்டனர்.
2013-ஆம் ஆண்டு மலேசியாவுக்கு ஸி ஜின்பெங் மேற்கொண்ட பயணத்தின் வழி, இரு நாடுகளின் அரச தந்திர உறவுகள் மேம்பட்டிருப்பதை தொடர்ந்து கடந்த 12 ஆண்டுகளில் மலேசியாவுக்கு அவர் மேற்கொண்டிருக்கும் இரண்டாவது அலுவல் பயணம் இதுவாகும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)