பொது

ஆயர் கூனிங்: இரவு மணி 9-க்கு முடிவுகள் வெளியிடப்படலாம் - எஸ்.பி.ஆர்

25/04/2025 04:35 PM

தாப்பா, 25 ஏப்ரல் (பெர்னாமா) -- நாளை நடைபெறவிருக்கும் ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான முடிவுகள் அதே நாளில் இரவு மணி 9-க்கு வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம், எஸ்.பி.ஆர் எதிர்பார்க்கிறது.

எனினும், அதிகாரப்பூர்வமற்ற முடிவுகள் அதற்கு முன்னரே வெளியிடப்படலாம் என்று எஸ்.பி.ஆர் செயலாளர் டத்தோ இக்மால்ருடின் இஷாக் தெரிவித்தார்.

வாக்களிப்பு மற்றும் வாக்குகள் எண்ணும் நடவடிக்கை சுமூகமாக நடைபெறும் பட்சத்தில் அதிகாரப்பூர்வ முடிவுகள் இரவு மணி ஒன்பது அளவில் வெளியிடப்படலாம் என்று, இன்று பேராக், தாப்பாவில் உள்ள மெர்டேக்கா மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குகள் எண்ணும் மையத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகளின் தயார்நிலைப் பணிகளை பார்வையிட்டப் பின்னர் டத்தோ இக்மால்ருடின் செய்தியாளர்களிடம் பேசினார்.

19 வாக்களிப்பு மையங்களில் பணிக்கமர்த்தப்பட்ட போலீஸ் உறுப்பினர்கள் உட்பட இந்த இடைத்தேர்தலில் 601 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பெயர் சரிபார்ப்பை எளிதாக்கவும், வாக்களிப்பு செயல்முறை சீராக நடைபெற உதவும் வகையிலும், தங்கள் மைகாட் அட்டையை உடன் கொண்டுவரும்படி பதிவுப் பெற்ற 31,281 வாக்காளர்களுக்கு இக்மால்ருடின் நினைவுறுத்தினார்.

--பெர்னாமா 

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]