கோலாலம்பூர், 26 ஏப்ரல் (பெர்னாமா) -- இடைநிலைப்பள்ளி மற்றும் உயர்க் கல்விக் கழக மாணவர்களிடையே இந்து சமய சிந்தனையையும் அதன் பகுத்தறிவையும் வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த 28 ஆண்டுகளாக தேசிய அளவிலான சமயப் புதிர்ப்போட்டியை மலாயாப் பல்கலைக்கழக இந்து சங்கம் ஏற்று நடத்தி வருகின்றது.
அதன் ஏற்பாட்டு குழுவால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட மின்னியல் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வாண்டு 29-வது முறையாக இன்று இப்போட்டி நடைபெற்றது.
தேசிய அளவிலான சமயப் புதிர்ப்போட்டியின் ஏற்பாட்டு குழுவினர் இந்து சமயம் சார்ந்த பல தகவல்களைத் தொகுத்து மின்னியல் புத்தகம் ஒன்றை தயாரித்து உள்ளடக்க சரிப்பார்ப்பிற்காக சமயநெறி பயிற்றுநர்கள் மற்றும் விரிவுரையாளர்களிடம் அந்நூலை ஒப்படைத்ததாக மலாயாப் பல்கலைக்கழக இந்து சங்கத் தலைவர் குகிலன் சுப்ரமணியம் தெரிவித்தார்.
அந்தச் செயல்முறைக்குப் பின்னர், போட்டி நடைபெறுவதற்கு இரு வாரங்களுக்கு முன்னர் அதில் பங்கேற்க பதிந்துக் கொள்ளும் மாணவர்களிடம் அந்நூல் வழங்கப்படுவதாக குகிலன் கூறினார்.
''சைவ, சமண, வைணவம் என நிறைய சமயங்கள் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக இந்து சமயம் என்று நாம் பார்க்கிறோம். இந்து சமயத்தில் அதிகமான நெறிகள் இருப்பதால், அவற்றை இன்னும் அதிகம் தெரிந்தவர்களிடம் கேட்டறிந்தோம். மாணவர்களுக்கும் புரிந்துகொள்ளும்படியான கேள்விகளையே கேட்கிறோம். அதோடு, மின்னியல் நூல் மூலம் அவர்கள் அதிகமான தகவல்களைப் பெறுகின்றனர்,'' என்றார் அவர்.
நாடு தழுவிய அளவில் உள்ள இடைநிலைப்பள்ளி, பொது, தனியார் பல்கலைக்கழகம், ஆசிரியர் பயிற்சிக் கழகம் மற்றும் மெட்ரிகுலேஷன் மாணவர்கள் என இம்முறை சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்புதிர்ப்போட்டியில் கலந்துகொண்டதாக 29-வது தேசிய அளவிலான சமயப் புதிர்ப்போட்டியின் இயக்குநர் சர்வினேஷன் சரவணமுத்து கூறினார்.
குழு வாரியாக நடத்தப்படும் இப்போட்டியில் பிரிவு A இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கும் பிரிவு B உயர்க் கல்விக் கழக மாணவர்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் கேள்விகள் பிரசுரிக்கப்படுவதாக சர்வினேஷன் குறிப்பிட்டார்.
''தொடக்கத்தில் தமிழ்மொழியில் மட்டும் வழிநடத்தப்பட்ட இப்போட்டி இன்றைய சூழலுக்கு ஏற்ப தற்போது ஆங்கிலத்திலும் வழிநடத்தப்படுகிறது. தமிழ்மொழியில் சிக்கலை எதிர்நோக்கும் மாணவர்களைக் கருத்தில் கொண்டு இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதோடு, முன்பெல்லாம் subjective அதாவது பதில் எழுத வேண்டிய கேள்விகள் கொடுக்கப்பட்டன. தற்போது objective எனப்படும் பல்விடை தேர்வு அடிப்படையிலான கேள்விகளுக்கே அவர்கள் பதிலளிக்க வேண்டும்,'' என்றார் அவர்.
இப்போட்டிக்கான விளம்பரத்தை தங்களின் இண்ஸ்டாகிரம் சமூக வலைத்தளத்தின் மூலம் மேற்கொள்ளும் ஏற்பாட்டு குழுவினர் பள்ளிகளை நேரடியாக அணுகியும் ஆசிரியர், பெற்றோர் மற்றும் மாணவர்களின் ஆதரவை பெறுவதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே, இப்புதிர்ப்போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் சிலரும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
''தமிழ்ப்பள்ளியில் பயின்றதால் இந்து சமயத்தைப் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் எங்களுக்குள் அதிகமாக இருந்து வருகிறது. இதுமாதிரியான போட்டிகள் எங்களுக்கு இன்னும் கூடுதல் உந்துதலை ஏற்படுத்துகின்றன,'' என்று இடைநிலைப்பள்ளி மாணவி ஓவியா மணிமாறன் கூறினார்.
''திருநீர் பூசுவதற்கான காரணம் என்ன, ஏன் கோவில்களுக்குச் செல்கிறோம், எப்படி வழிபாடு செய்ய வேண்டும், நால்வர்கள் யார் போன்ற பல விஷயங்களை இதன் மூலம் கற்றுக்கொள்கிறோம்,'' என்று பல்கலைக்கழக மாணவி புவனேஸ்வரி மோகன் குறிப்பிட்டார்.
''சாதாரண நாள்களில் நாம் சமயம் குறித்து கற்பது அரிதான ஒன்று. இதுபோன்ற போட்டிகளில் பங்கெடுக்கும்போது அதைப் பற்றி நன்கு படித்து கேள்விகளுக்கு விடையளிக்கும்போது தானாகவே சமய அறிவு வளர்கிறது,'' என்று பல்கலைக்கழக மாணவர் சுந்தரேசன் திருன்கேசவன் தெரிவித்தார்.
இன்று, கோலாலம்பூர், மலாயாப் பல்கலைக்கழக சட்டப் புலத்தில் இப்போட்டிக்கான பரிசளிப்பும் நிறைவு விழாவும் நடைபெற்றது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]