கோலா குபு பாரு, 26 ஏப்ரல் (பெர்னாமா) -- இம்மாதம் 19-ஆம் தேதி நடைபெற்ற Setiawangsa கிளைத் தலைவர் தேர்தலின் முடிவுகள் குறித்த ஆட்சேபனைக் கடிதத்தை, கட்சித் தேர்தல் செயற்குழு ஜே.பி.பி-க்கு அனுப்பியதை கெஅடிலான் உதவித் தலைவர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் இன்று உறுதிப்படுத்தினார்.
தேர்தல்கள் தொடர்பில் எழுந்துள்ள ஆட்சேபனைகள் குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கும் பொறுப்பை தாம் அச்செயற்குழுவிடமே ஒப்படைத்துவிட்டதாகவும், இவ்விவகாரம் நியாயமாகவும் கட்சியில் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளின்படியும் தீர்க்கப்படும் என்று தாம் நம்புவதாகவும் செத்தியவங்சா நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.
“நான் அனுப்பிவிட்டேன். எங்களின் கடிதத்தை நாங்கள் அனுப்பி விட்டோம். பதிலுக்காக காத்திருக்கின்றோம். இன்று கூட மத்திய தலைமைத்துவ கூட்டம் நடைபெற்றது. எனவே, முடிவுக்காக காத்திருக்கின்றோம்,” என்றார் அவர்.
சிலாங்கூர், கோலா குபு பாருவில் உள்ள சுங்கை டூசுன் வனவிலங்கு பாதுகாப்பு மையத்தில் நடைபெற்ற 2025-ஆம் ஆண்டிற்கான உலக Tapir தினத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த பின்னர் இயற்கைவளம் மற்றும் இயற்கை நிலைத்தன்மை அமைச்சருமான நிக் நஸ்மி செய்தியாளர்களிடம் அதனை கூறினார்.
முன்னதாக, இம்மாதம் 19-ஆம் தேதி நடைபெற்ற செத்தியவங்சா கிளைத் தலைவர் தேர்தலில், 563 வாக்குகள் பெற்று, பிரபல நடிகரும் திரைப்பட இயக்குநருமான டத்தோ அஃப்ட்லின் ஷௌக்கியிடம் தோல்வியைத் தழுவினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]