பொது

மருந்துகளின் விலைப்பட்டியல்; சுகாதார அமைச்சு வெளிப்படைத்தன்மை

04/05/2025 05:51 PM

புத்ராஜெயா, 04 மே (பெர்னாமா) -- இம்மாதம் தொடங்கி தனியார் சுகாதார நிலையங்களிலும் மருந்துகளின் விலைப்பட்டியலை காட்சிப்படுத்துவதை கட்டாயமாக்குவதன் மூலம் நாட்டின் சுகாதார அமைச்சின் வெளிப்படைத்தன்மைக்கான உறுதிப்பாடு மீண்டும் புலப்படுகின்றது.

உண்மை நிலவரம் அல்லது தகவல் அறிந்து முடிவு செய்யும் பயனீட்டாளர்களின் ஒரு முயற்சியாக, 2011-ஆம் ஆண்டு விலைக் கட்டுப்பாடு மற்றும் இலாப எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இந்நடவடிக்கை செயல்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்லி அஹ்மட் தெரிவித்தார்.

''நேற்று மூன்று மருந்தகங்கள் மற்றும் ஒரு சுகாதார சிகிச்சையகத்தைப் பார்வையிடுவதற்கான வாய்ப்பு எனக்குக் கிட்டியது. தனியார் சிகிச்சையகங்களுக்குள் நுழைவது உட்பட QR குறியீடுகளைப் பயன்படுத்தும் முறையை அவர்களி எனக்குக் காட்டினர். சட்டவிரோத மருந்துகளை நிராகரிக்கும் திட்டத்தை உட்படுத்தி கோலா சிலாங்கூரில் இதை நாங்கள் மேற்கொண்டோம். 3 மருந்தகங்களும் ஒரு தனியார் சிகிச்சையகமும் அதை செயல்படுத்தியதாக என்னிடம் காட்டின,'' என்றார் அவர். 

இன்று புத்ராஜெயாவில் 2025ஆம் ஆண்டுக்கான தேசிய நுரையீரல் சுகாதார முயற்சி குறித்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பின்னர் அவர் அவ்வாறு கூறினார்.

இதனிடையே, இம்மாதம் முதலாம் தேதி தொடங்கி நாடு தழுவிய அளவிலுள்ள அனைத்து மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் சிகிச்சையகங்கள் மற்றும் மருந்தகங்களிலும் மருந்துக்கான விலைகளைக் காட்சிப்படுத்த வேண்டும் என்ற புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சும் , உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவீன அமைச்சும் இணைந்து அது தொடர்புடைய தரப்பினருடன் கலந்தாலோசிப்புகளை நடத்திய வண்ணமாக உள்ளது.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]