கோலாலம்பூர், 10 மே (பெர்னாமா) -- 2025 முதல் 2028-ஆம் ஆண்டிற்கான கெஅடிலான் கட்சியின் மத்திய அளவிலான தேர்தலில் போட்டியிட 251 வேட்பாளர்கள் முன்வந்துள்ளனர்.
மத்திய தலைமைத்துவ மன்றத்திற்கு 104 வேட்பாளர்கள், இளைஞர் அணி தலைமைத்துவ மன்றத்திற்கு 85 வேட்பாளர்களும் மகளிர் தலைமைத்துவ மன்றத்திற்கு 62 வேட்பாளர்களும் போட்டியிடவிருப்பதாக கட்சித் தேர்தல் செயற்குழு ஜே.பி.பி தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சலிஹா முஸ்தாபா தெரிவித்தார்.
ஊக்கமளிக்கும் இந்த பங்கேற்பு, கெடிலான் கட்சிக்குத் திறமையான புதிய முகங்கள் குறைவு இல்லை என்பதை நிரூபிக்கிறது.
மாறாக, கட்சிக்குள் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் புதிய நபர்களுக்கு எப்போதும் வாய்ப்பளிக்கும், கட்சியின் நிலைப்பாட்டை அது மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
மத்திய தலைமைத்துவத்திற்கான வேட்பாளர் நியமன செயல்முறை, கடந்த வியாழக்கிழமை தொடங்கி, இரு நாள்களுக்கு நடைபெற்றது.
அதற்கான ஆட்சேபனைக் காலம், மே 11 மற்றும் 12-ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டிருக்கும் வேளையில், ஆட்சேபனைக்கு மேல்முறையீடு செய்வதற்கு மே 13 மற்றும் 14-ஆம் தேதி வழங்கப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)