ஜோகூர் பாரு, 03 அக்டோபர் (பெர்னாமா) -- FA கிண்ணம்.
நேற்றிரவு, ஜோகூர், சுல்தான் இப்ராஹிம் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் 5-3 என்ற கோல் கணக்கில் யூம்.எம் டாமன்சாரா யூனைடட்டை வீழ்த்தி, ஜே.டி.தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
இதன்வழி, பத்து புள்ளிகளைப் பெற்று ஜே.டி.தி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
சிஸ்கோ முனோஸ் நிர்வகிக்கும் அவ்வணி, வரும் அக்டோபர் 18-ஆம் தேதி, பினாங்கு பண்டாராயா அரங்கில் நடைபெறவிருக்கும் முதல் காலிறுதியில் பினாங் எஃப்.சி-ஐ சந்திக்கவுள்ளது.
ஆட்டம் தொடங்கிய மூன்றாவது நிமிடத்திலேயே அந்த தென் மாநில அணியின் மெனுவல் ஹிடல்கோ தட்டிக் கொடுத்த பந்தை லாவகமாக கோலாக்கி ரொமெல் மொரலெஸ் அவ்வணிக்கான முதல் கோலை பெற்றுத் தந்தார்.
அதனைத் தொடர்ந்து, ஐந்தாவது நிமிடத்தில் ஹிடல்கோ மூலம் இரண்டாவது கோல் அடிக்கப்பட்ட நிலையில், ஜே.டி.தி-க்கான மூன்றாவது கோலை ஹெபர்டி ஃபெர்ணன்டஸ் ஆட்டத்தின் 15-வது நிமிடத்தில் போட்டார்.
இவ்வேளையில், சற்றும் மனம் தளராத யூ.எம் டாமன்சாரா அணி, ஆட்டத்தின் 62-வது நிமிடத்தில் தெங்காட் மைக்கல் மூலம் அதற்கான முதல் கோலை பெற்றது.
அதனைத் தொடர்ந்து 66-வது நிமிடத்தில் தெங்காட்டிடமிருந்து கிடைத்த பந்தை அனுவார் சிசே தமது அணிக்கான இரண்டாவது கோலாக்கிய நிலையில், ஆட்டத்தின் 74-வது நிமிடத்தில் மூன்றாவது கோலை அடித்தார்.
மொரலெஸ் மூலம் மீண்டும் ஹரிமாவ் செலத்தானுக்கான ஐந்தாவது கோல் அடிக்கப்பட்ட நிலையில் அதன் வெற்றியும் உறுதியானது.
இதன்வழி, இப்பருவத்தில் மொத்தம் 15 ஆட்டங்களில் ஜே.டி.தி தொடர் வெற்றியை பதிவு செய்துள்ளது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]