பொது

வேப்பிற்கான வரி விகிதத்தை ஒரு மில்லிலிட்டருக்கு 10 மடங்கு அதிகரிக்க பரிந்துரை

07/10/2025 05:31 PM

கோலாலம்பூர், 07 அக்டோபர் (பெர்னாமா) -- மின்னியல் சிகரெட் அல்லது வேப்பிற்கான வரி விகிதத்தை ஒரு மில்லிலிட்டருக்கு 10 மடங்கு அதிகரித்து 40 சென்னிலிருந்து நான்கு ரிங்கிட்டாக உயர்த்த சுகாதார அமைச்சு பரிந்துரைத்துள்ளது.

வேப் பொருட்களுக்கான வரி விகிதத்தை வழக்கமான புகையிலை பொருட்களுக்கான வரி விகிதங்களுடன் சீரமைக்க நிதி அமைச்சிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சுகாதார துணை அமைச்சர் டத்தோ லுகானிஸ்மான் அவாங் சௌனி தெரிவித்தார்.

''திரவத்தைப் பொறுத்தவரை, ஒரு மில்லி லிட்டர் வேப் திரவத்திற்கு 100 முறை அல்லது 200 முறை பிடிப்பதற்கு நிகரான வரி விதிக்கப்படுகின்றன. பரிந்துரைக்கப்பட்ட வரி விகிதம் ஒரு மில்லிலிட்டருக்கு 40 சென்னிலிருந்து நான்கு ரிங்கிட் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதுதான் அமைச்சின் பரிந்துரை,'' என்றார் அவர். 

வேப் பயன்பாட்டிற்கு முழுமையான தடையை அமல்படுத்துவதற்கு முன்னர்,  உடனடி நடவடிக்கையாக, 2026ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் வழி உட்பட புகையிலை பொருட்கள் போன்று வேப் பொருட்கள் மீதான வரிகளை அதிகரிக்க சுகாதார அமைச்சு பரிந்துரைத்துள்ளதா என்று தாசேக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் வான் சைஃபுல் வான் ஜான் எழுப்பியக் கேள்விக்கு டத்தோ லுகானிஸ்மான் அவ்வாறு பதிலளித்தார்.

மலேசியாவில் மின்னியல் சிகரெட்டுகளை முற்றிலுமாக தடை செய்வதற்கான பரிந்துரை, கொள்கை அளவில் ஒப்புதலைப் பெற இந்த ஆண்டு அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]