டாக்கா, 18 அக்டோபர் (பெர்னாமா) -- வங்களாதேசத்தை சீரமைக்கும் பொருட்டு தயாரிக்கப்பட்ட ஜூலை சார்ட்டர் (July Charter) எனும் அரசியல் சீர்திருத்த வரைபடத்தை அந்நாட்டின் பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஆதரித்துள்ளன.
இந்த சீர்திருத்த வரைபடத் திட்டம் அந்நாட்டின் அரசியல் மற்றும் நிறுவனங்களை மறுவடிவமைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
வெள்ளிக்கிழமை டாக்காவில் நடைபெற்ற வரைபடத் திட்டத்தில் கையெழுத்திடும் விழாவில் அந்நாட்டின் பெரும்பாலான கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இருப்பினும், கடந்த ஆண்டு மாணவர்கள் தலைமையிலான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த நான்கு இடதுசாரி சார்பு கொண்ட கட்சிகள் இதில் கலந்துகொள்ளவில்லை.
வரைபடத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள உறுதிமொழிகளை செயல்படுத்துவதற்கான சட்ட கட்டமைப்புகளுக்கு உத்தரவாதம் இல்லாததால் இவ்விழாவை புறக்கணிப்பதாக அக்கட்சிகள் விளக்கம் அளித்திருக்கின்றன.
நாட்டின் அரசியல் ஒழுங்கை மீட்டெடுப்பதற்கும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் திட்டமிடப்பட்டிருக்கும் பொதுத் தேர்தலுக்குத் தயாராவதற்கும் இத்திட்டம் முக்கிய பங்கு வகிக்கும் என்று, இடைக்கால பிரதமர் முஹமட் யூனுஸ் தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஆண்டு மாணவர்கள் தலைமையிலான போராட்டத்திற்கு பிற்கு அந்நாட்டில் தற்போது இடைக்கால அரசாங்கம் ஆட்சி செய்து வருகிறது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]