உலகம்

ஆசிய பயணத்தின் ஒரு பகுதியாக தகைச்சியை சந்தித்தார் டிரம்ப்

28/10/2025 05:03 PM

தோக்கியோ, 28 அக்டோபர் (பெர்னாமா) -- அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் தனது ஆசிய பயணத்தின் ஒரு பகுதியாக ஜப்பானின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் சனே தகைச்சியை செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.

வர்த்தகப் பதற்றங்களைத் தணிக்க, பதவியேற்ற சில நாட்களிலேயே சனே தகைச்சி இச்சந்திப்பின்போது டிரம்புடன் தனிப்பட்ட தொடர்பை உருவாக்க முயற்சி செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இச்சந்திப்பின் போது, ​​டிரம்ப், தகைச்சியை மிகவும் பாராட்டியதோடு ஜப்பானுக்கு உதவ என்ன செய்ய முடியுமோ அதை தங்கள் தரப்பு செய்யும் என்றும் உறுதியளித்தார்.

"எனக்கு ஜப்பான் மீது எப்போதும் மிகுந்த அன்பும், ஜப்பான் மீது மிகுந்த மரியாதையும் உண்டு. இந்த உறவு முன்பை விட வலுவாக இருக்கும் என்றும், உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றும் நான் கூறுவேன். நமது நாட்டின் சார்பாக, உங்களுக்கு ஏதேனும் கேள்விகள், சந்தேகங்கள், உங்களுக்குத் தேவையான உதவிகள் இருந்தால், ஜப்பானுக்கு உதவ நான் செய்யக்கூடிய எதையும் செய்ய அங்கே நான் இருக்கிறேன் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். நாங்கள் வலுவான மட்டத்தில் ஒரு நட்பு நாடு," என்றார் அவர். 

இதனிடையே, டிரம்பும் தகைச்சியும் செவ்வாய்க்கிழமை அகாசக்கா அரண்மனையில் தங்கள் நாடுகளின் கூட்டணியின் "பொற்காலம்" என்பதற்கான ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் கையெழுத்திட்டனர்.

கையெழுத்திடப்பட்ட இந்த ஆவணம், ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 15 விழுக்காட்டு வரி விதிக்கும் முந்தைய கட்டமைப்பை மீண்டும் உறுதிப்படுத்தியதோடு, அமெரிக்காவில் முதலீடு செய்ய ஜப்பானுக்கு 55 ஆயிரம் கோடி டாலர் நிதியை உருவாக்கியது.

அதுமட்டுமின்றி, முக்கியமான கனிமங்கள் மற்றும் அரிய மண் தனிமங்களின் விநியோகத்தைப் பாதுகாப்பதற்கான அமெரிக்க-ஜப்பான் கட்டமைப்பை வகுக்கும் இரண்டாவது ஒப்பந்தத்திலும் டிரம்பும் தகைச்சியும் கையெழுத்திட்டனர்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]