அரசியல்

தீர ஆராய்ந்தும் வருங்கால தலைமுறையை மனதில் நிறுத்தியும் முடிவெடுப்பீர் - ம.இ.கா-விற்கு ஆலோசனை

17/11/2025 05:38 PM

கோலாலம்பூர், 17 நவம்பர் (பெர்னாமா) -- சரியான அங்கீகாரமும் உரிய மரியாதையும் கிடைக்காததால் தேசிய முன்னணியிலிருந்து ம.இ.கா வெளியேறுமா...

அவ்வாறு வெளியேறிய பின்னர் பெரிக்காத்தான் நேஷனலுடன் அக்கட்சி கைக்கோர்க்குமா...

இழுபறியாக இருந்து வந்த இவ்விவகாரத்திற்கு அக்கட்சியின் தலைவர் டான் ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் நேற்று முற்றுப்புள்ளி வைத்தார்.

ம.இ.கா-வின் 79-வது பேராளர் மாநாட்டில் தேசிய முன்னணியை விட்டு வெளியேறுவதற்கான இணக்கத்தை 1,500-க்கும் மேற்பட்ட பேராளர்கள் எழுத்துப்பூர்வ வடிவில் தெரிவித்திருந்தாலும்...

எவ்வித இறுதி முடிவும் எடுக்கப்படாமல், மத்திய செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் அறிவிப்பதாக அவர் கூறியிருந்தது முதிர்ச்சியான பதிலாகும் என்று மலாயா பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறையின் முன்னாள் தலைவர், இணைப் பேராசிரியர் முனைவர் கிருஷ்ணன் மணியம் தெரிவித்தார்.

"தேசிய முன்னணியின் கூட்டணியில் இருந்து ம.இ.கா வெளியேறினால் அதன் ஏற்படும் நன்மை தீமை என்ற நிலையில், கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்னர் மீண்டும் ஒரு காலகட்டத்தில் அது அக்கூட்டணி வசம் திரும்புமா என்பது ஒரு கேள்வியாக உள்ளது. அதேவேளையில் ம.இ.கா வெளியேறினால் இந்தியர்கள் சார்ந்த மற்ற கட்சிகள் அக்கட்சியின் இடத்தை தேசிய முன்னணியில் நிரப்பக்கூடும் என்ற ஆருடமும் எழுந்துள்ளது," என்று அவர் குறிப்பிட்டார்.

தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சி அந்தஸ்த்தை மீட்டுக் கொண்டு ம.இ.கா வெளியேறினால், சுதந்திரமாகவும் தன்னிச்சையாகவும் சிந்திக்கக்கூடிய நிலைப்பாட்டை அக்கட்சியால் அடைய முடியும்.

ஏனெனில், தேசிய முன்னணியில் இருக்கும் வரை அம்னோவின் கட்டுப்பாட்டில்தான் இருந்தாக வேண்டும் என்ற ஒரு நிலைமை ம.இ.கா-விற்கு உள்ளது மறுப்பதற்கில்லை என்று முனைவர் கிருஷ்ணன் மணியம் கூறினார்.

மத்திய செயற்குழு கூட்டத்திற்குப் பின்னர் தேசிய முன்னணியில் இருந்து வெளியேறும் முடிவை ம.இ.கா திட்டவட்டமாகக் கொண்டிருந்தால், அதற்கு பின்னர் அவர்கள் இருவேறு நிலைப்பாட்டை மேற்கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.

"ஒன்று சபா, சரவாக்கை போன்று நம்பிக்கைக் கூட்டணியில் இணைந்து கொள்வதற்கான பேச்சுவார்த்தையை அதன் தலைமைத்துவதுடன் மேற்கொள்ள ம.இ.கா முனையலாம். இல்லையேல் எதிர்க்கட்சியான பெரிக்காத்தான் நேஷனலிலும் அவர்கள் இணைந்து கொள்வது குறித்து சிந்திக்கலாம்," என்று அவர் ஆலோசனைக் கூறினார்.

அவ்வாறு அக்கட்சியில் இணைய விரும்பினால், அதற்கு முன்னதாக சில முக்கிய நடவடிக்கைகளை அவர்கள் முன்னெடுக்க வேண்டும்.

குறிப்பாக பெரிக்காத்தான் நேஷனலின் உறுப்புக் கட்சியான பாஸ் கட்சியின் கொள்கைகள், அனுகூலங்கள், திட்டங்கள் ஆகியவற்றிற்கு ம.இ.கா சில முன்திட்டங்களை எடுத்து கொள்ளக்கூடிய ஒரு நிலை ஏற்படும் என்று முனைவர் கிருஷ்ணன் மணியம் நினைவுறுத்தினார்.

எனவே, தேசிய முன்னணியில் இருந்து ம.இ.கா வெளியேறுவது, சாதகமான மற்றும் பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தும் என்று தாம் நம்புவதால்தீர ஆராய்ந்தும், கலந்தாலோசித்தும், வருங்கால தலைமுறையினரை மனதில் நிறுத்தியும் முடிவெடுக்குமாறு அக்கட்சியின் தலைமைத்துவத்தை தாம் கேட்டுக் கொள்வதாக அரசியல் ஆய்வாளருமான இணைப் பேராசிரியர் முனைவர் கிருஷ்ணன் மணியம் பெர்னாமா செய்திகள் தொடர்பு கொண்டபோது கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)