அரசியல்

கூட்டணியிலிருந்து வெளியேறுவதற்கான ம.இ.கா-வின் தீர்மானம் குறித்து முடிவெடுக்கப்படவில்லை

14/12/2025 06:35 PM

சிலாங்கூர், 14 டிசம்பர் (பெர்னாமா) -- ம.இ.கா.விடமிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு பெறப்படாத நிலையில் கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கான அக்கட்சியின் தீர்மானம் குறித்து தேசிய முன்னணி முடிவெடுக்கவில்லை.

கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடைபெற்ற கட்சியின் 79-வது பேராளார் மாநாட்டில் மஇகா அந்த தீர்மானத்தை அங்கீகரித்தப் பிறகும் தேசிய முன்னணியுடன் எந்தவொரு சந்திப்பும் நடைபெறவில்லை என்று அதன் தலைவர் டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

இது தொடர்பாக ம.இ.கா முடிவை எடுக்கத் தவறினால் தேசிய முன்னணி தலைமைத்துவம் தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்,

''ஆனால், அவர்கள் முடிவு எடுக்கவில்லை என்றால் நாங்கள் ஒரு முடிவை எடுப்போம்.'' என்றார் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி 

இன்று ஞாயிற்றுக்கிழமை சிலாங்கூர், செமினி-இல் நடைபெற்ற ஐ.பி.எஃப் கட்சியின் 33-வது தேசிய பேராளர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் சாஹிட் அதனை தெரிவித்தார்.

ம.இ.கா கூட்டணியில் இருந்து விலகினால் தேசிய முன்னணியில் உள்ள இதர கட்சிகள் வருத்தப்பட வேண்டாம் என்றும் அவர் நினைவூட்டினார்.

16-வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக 24 மாதங்களில் நாட்டின் அரசியல் சூழல் மாற்றம் காணும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சாஹிட் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ)