கோலாலம்பூர், 21 நவம்பர் (பெர்னாமா) -- ம.இ.கா-வின் மத்திய செயலவைக் கூட்டத்தை நடத்தி பெரிக்காத்தான் நேஷனல் உட்பட எந்தவொரு கூட்டணியிலும் இணைவது குறித்த இறுதிக்கட்ட முடிவெடுத்த பின்னரே இதன் தொடர்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தம்மால் வெளியிட முடியும் என்று அக்கட்சியின் தலைவர் டான் ஶ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன் அண்மையில் நடைபெற்ற அதன் 79-வது பேராளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார்.
எனினும், 60-ஆண்டுகளுக்கும் மேல் கூட்டணியாக இருக்கும் தேசிய முன்னணியில் இருந்து விலகி மற்றொரு கூட்டணியில் இணைவதற்கோ, அல்லது பிற கட்சிகள் அக்கூட்டணியில் இணைவதற்கோ சட்டத்தில் இடம் உள்ளதா?
அது குறித்து விளக்குகிறார், அரசியல் ஆய்வாளர் முனைவர் ஜி.மணிமாறன்.
''கட்சித் தாவும் சட்டம் தற்போது உள்ளது. அது, நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் தனிநபருக்கு மட்டுமே உள்ளது. அவர்கள் ஒரு கட்சியிலிருந்து விலகினால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவர். ஆனால், அரசியல் கட்சி ஒன்று தாம் இருக்கும் கூட்டணியிலிருந்து எந்த நேரத்திலும் வெளியேறலாம். அவ்வகையில், ம.இ.கா தேசிய முன்னணியிலிருந்து வெளியேறும் பட்சத்தில், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ எம். சரவணின் நிலை பாதிக்கப்படாது,'' என்றார் அவர்.
எனினும், ஓர் அரசியல் கட்சியைப் பிரதிநிதித்து நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஒருவர் தமது கட்சியிலிருந்து வெளியேறும் பட்சத்தில், நடப்பில் உள்ள சட்டப்படி இடைத்தேர்தலை நடத்தியாக வேண்டும் என்பது திண்ணம் என்று முனைவர்
ஜி. மணிமாறன் விவரித்தார்.
அதேவேளையில், தேசிய முன்னணி கூட்டணியிலிருந்து ம.இ.கா வெளியேற நேர்ந்தால் எந்தவொரு கட்சியையும் அக்கூட்டணியில் புதிதாக இணைத்துக் கொள்ளும் சட்டமும் உள்ளதாக அவர் தெளிவுபடுத்தினார்.
''எந்த கட்சியும் தேசிய முன்னணியில் இணைவதற்கு வாய்ப்புள்ளது. அதாவது, அரசியல் சட்டத்தின் கீழ். ஆனால், தேசிய முன்னணிக்கனெ சட்டங்கள் உள்ளன. அக்கூட்டணியில் உள்ள இதர கட்சிகள் அப்புதியக் கட்சியை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தேசிய முன்னணி அதற்கு அனுமதியளிக்க முடியும்,'' என்றார் அவர்.
எனினும், அக்கூட்டணியில் உள்ள இதர உறுப்பிக் கட்சிகளின் ஒப்புதலும் இதற்கு முதன்மையான ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, பல ஆண்டுகளாக இருக்கும் கூட்டணியிலிருந்து விலகி, அண்மையில் தோன்றிய கூட்டணியில் இணைவதால் ஒவ்வொரு கட்சிக்கும் உண்டாகும் விளைவுகள் குறித்து மணிமாறன் விவரித்தார்.
''தேசிய முன்னணியில் உள்ள அனைத்து உறுப்புக் கட்சிகள், அதாவது, அம்னோ, ம.சீ.ச, ம.இ.கா மற்றும் சபா மக்கள் ஐக்கிய கட்சி ஆகிய அனைத்து நான்கு கட்சிகளுக்கும் நிச்சயம் பாதிப்பு ஏற்படும்,'' என்றார் அவர்.
ஏறத்தாழ ஓராண்டு காலத்தில் பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அதில் ஏற்படக்கூடும் சுணக்கங்களைத் தவிர்க்கும் பொருட்டு, 17-வது சபா மாநிலத் தேர்தலுக்குப் பின்னர் ம.இ.கா-வை சந்திக்கவிருப்பதாக தேசிய முன்னணித் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் உறுதியளித்துள்ளார்.
தேசிய முன்னணியில் இருந்து விலகி, பெரிக்காத்தான் நேஷனலில் இணைவதற்கு, ம.இ.கா-வின் 1,500-க்கும் மேற்பட்ட பேராளர்கள் ஏகமனதாக சம்மதம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]