பொது

மாணவி கொலை: மாணவனின் மனநல பரிசோதனை அறிக்கை அடுத்த மாதம் நிறைவடையும்

21/11/2025 05:08 PM

பெட்டாலிங் ஜெயா, 21 நவம்பர் (பெர்னாமா) -- அண்மையில், பண்டார் உத்தாமாவில் உள்ள இடைநிலைப்பள்ளி ஒன்றின் கழிவறையில் 16 வயது மாணவியைக் கொலை செய்த குற்றச்சாட்டை எதிர்நோக்கி இருக்கும் மாணவனின் மனநல பரிசோதனை அறிக்கை அடுத்த மாதம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அவ்வறிக்கையைத் தயாரிப்பதற்கு பேராக், பஹகியா உலு கிந்தா மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்களுக்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாக அந்த 14 வயது மாணவனை பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் கிசொன் ஃபூங் தெரிவித்தார். 

சுமார் ஒரு மாத நீட்டிப்பை அனுமதிக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் செக்‌ஷன் 342(4)-இன் கீழ் நீதிமன்றம், அக்கால அவகாச நீட்டிப்புக்கு அனுமதியளித்ததாக இன்று நடைபெற்ற வழக்கு விசாரணைக்குப் பின்னர் ஃபூங் கூறினார். 

அடுத்த வழக்கு விசாரணைக்குள் அவ்வறிக்கை நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உயர்நீதிமன்றத்தில் இக்குற்றத்தை ஒப்புக்கொள்வதற்கு முன்னர் அல்லது கொலைக் குற்றச்சாட்டிற்கான வழக்கு விசாரணையை நிர்ணயிப்பதற்கு முன்னர், குற்றம் சாட்டப்பட்டவரின் அறிவுத் திறன் நிலையை தீர்மானிக்க அவரது விரிவான மனநல பரிசோதனை அறிக்கை முக்கியமானது என்றும் அவர் விவரித்தார். 

இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு வரும் டிசம்பர் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி காலை மணி 9.20-இல் இருந்து 9.35-க்குள் பண்டார் உத்தாமாவில் உள்ள இடைநிலைப்பள்ளி ஒன்றில் 16 வயது மாணவியை கொலை செய்ததாக முதலாம் படிவ மாணவன் ஒருவன் கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி குற்றஞ்சாட்டப்பட்டான்.  

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]