பொது

தனி்நபர் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ள ஆலயங்கள் தமிழ்ப்பள்ளி நிலங்களின் பெயர்கள் மாற்றப்பட வேண்டும்

05/12/2025 06:41 PM

ஈப்போ, டிசம்பர் 05 (பெர்னாமா) -- நாட்டில் தனிநபர்களின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ள ஆலயங்கள் மற்றும் தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் அமைந்துள்ள நிலங்கள் அந்தந்த ஆலயங்கள் மற்றும் தமிழ்ப்பள்ளிகளின் பெயர்களுக்கு மற்றப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் சட்ட சிக்கலிலிருந்து விடுபடும் வாய்ப்பை இந்நடவடிக்கை ஏற்படுத்தும் என்று பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் தெரிவித்தார்.

இந்நிலையில் பல ஆண்டுகளாகத் தஞ்சோங் ரம்புத்தானில் உள்ள சமயபுற மகா மாரியம்மன் ஆலயம் தனி்நபர்களின் பெயரில் பதிவுப் பெற்றிருந்த நிலையில் தற்போது அது அந்த ஆலயத்தின் பெயருக்கே மாற்றப்பட்டிருப்பதாக டத்தோ அ. சிவநேசன் கூறினார்.

''இந்த ஆலயம் 1919ஆன் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட ஒன்று. முறையாக அரசாங்கப் பதிவேட்டில் உள்ளது. ஆனால், இரு தனிநபர்களின் பெயர்களில் பதிவாகியிருந்தது. அவர்களும் மறைந்து பல ஆண்டுகளாகி விட்டன. இப்போது சட்டம் மாறிவிட்டது. அதற்கேற்ப நாமும் அச்செயல்முறைகளை மேற்கொள்ள வேண்டும்,'' என்றார் பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன்.

இன்று சம்பந்தப்பட்ட அந்நிலம் அவ்வாலயத்தின் பெயரிலேயே அரசாங்க பதிவேட்டில் பதிவாகியுள்ளது.

இதனிடையே, இவ்விவகாரம் பேராக் மாநிலத்தில் மட்டும் நிகழவில்லை என்றும் மாறாக மற்ற மாநிலங்களிலும் இப்பிரச்சனை நிலவியுள்ளதால் அதற்கான தீர்வைச் சம்பந்தப்பட்ட தரப்பினர் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் நினைவுறுத்தினார்.

''நட்டில் இருக்கக்கூடிய அனைத்து ஆலயங்களும் திருத்தம் செய்ய வேண்டும்,'' என்றார் டத்தோ அ. சிவநேசன்.

மேலும், பேராக்கில் தனி்நபர்களின் பெயரில் இருந்த சில தமிழ்ப்பள்ளிகள் அமைந்துள்ள நிலங்கள் அந்தந்த தமிழ்ப்பள்ளிகளின் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பதையும் சிவநேசன் சுட்டிக்காட்டினார்.

இன்று பேராக் மாநில அரசாங்க செயலக அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அத்தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)