புது டெல்லி, 09 டிசம்பர் (பெர்னாமா) -- இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான IndiGo இம்மாதம் குறைந்தது 2,000 விமான சேவைகளை ரத்து செய்ததை அடுத்து, புது டெல்லியில் உள்ள விமான நிலையத்தில் தங்களின் பயண பெட்டிகளையும் பொருட்களையும் தேடி கண்டுபிடிப்பதில் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
விமானப் பயணப் பாதுகாப்பை மேம்படுத்தும் முயற்சியில், விமானிகள் விமானத்தை இயக்கும் நேரத்தைக் கட்டுப்படுத்தும் கடுமையான புதிய விதிமுறைகளை இந்திய அதிகாரிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
ஆனால், தனது நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதற்கான காலக்கெடுவை சரியாக திட்டமிடத் தவறியதோடு, ஊழியர்கள் பற்றாக்குறையால் இண்டிகோவின் சேவையில் நெருக்கடி பெருகியுள்ளது.
இதனால், பல ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் சிக்கிக்கொண்டதோடு, அவர்களின் விடுமுறை, திருமண ஏற்பாடுகள் என பல திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும், காணாமல் போன பயணப் பெட்டிகளைத் தேடுவதில், பயணிகளின் கோபம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நெருக்கடியால் கடந்த ஏழு நாட்களில் இண்டிகோவின் பங்குகள் கிட்டத்தட்ட 17 விழுக்காடு சரிந்துள்ள வேளையில், அதன் சந்தை மதிப்பில் கோடிக்கணக்கான இழப்பு ஏற்பட்டுள்ளது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]