சண்டாகான் , 23 நவம்பர் (பெர்னாமா) --17-வது சபா மாநிலத் தேர்தலை முன்னிட்டு, எட்டாவது நாளாக நடைபெறும் பிரச்சாரத்தில், சமூக ஊடகத்தை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பில், தொடர்பு அமைச்சிற்கு இதுவரை ஒரு புகார் மட்டுமே கிடைத்துள்ளது.
தேவையற்ற குழப்பத்தை தவிர்ப்பதற்காக மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்சிஎம்சி-ஆல், அப்பதிவு அடையாளம் காணப்பட்டு அகற்றப்பட்டுள்ளதாக தொடர்பு துணை அமைச்சர் தியோ நி சிங் தெரிவித்தார்.
''ஆம், உண்மையில் இருக்கிறது. உதாரணத்திற்கு ஒரு வழக்கு உள்ளது. நமது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சபாவிலிருந்து வெளியேற்றப்பட்டதாகக் கூறிய ஒரு பொறுப்பற்ற இணையவாசி இருக்கிறார். அது உண்மையில் ஒரு போலியான செய்தி. எனவே, இது தொடர்பில் பி.டி.ஆர்.எம்-உடன் இணைந்து எம்.சி.எம்.சி தகுந்த நடவடிக்கை எடுக்கும்'', என்றார் அவர்.
சபா மாநிலத் தேர்தலை முன்னிட்டு, இன்று சண்டாகானில் அமைக்கப்பட்டுள்ள ஊடக மையத்தை, பார்வையிட்ட பின்னர் செய்தியாளர் சந்திப்பில் தியோ நி சிங் அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)