பொது

மலேசியா அமெரிக்காவிற்கு இரு மடங்கு வரி செலுத்தும் கூற்றை மறுத்த தெங்கு சஃப்ருல்

23/02/2026 05:18 PM

கோலாலம்பூர், 23 பிப்ரவரி (பெர்னாமா) -- மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது மலேசியா அமெரிக்காவிற்குக் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு வரி செலுத்துவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை முதலீடு, வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சின் முன்னாள் அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் மறுத்து, அக்கூற்றுத் தவறானது என்றும் விவரித்திருக்கின்றார்.

பிப்ரவரி 21-ஆம் தேதி அமெரிக்க உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து மலேசியா மீது முன்னதாக விதிக்கப்பட்ட 19 விழுக்காட்டு வரி இனி நடைமுறைப்படுத்தப்படாது என்றும் அவர் கூறினார்.

47-வது ஆசியான் உச்சநிலை மாநாட்டின் போது, 2025-ஆம் ஆண்டு அக்டோபர் 26-ஆம் தேதி கையெழுத்திடப்பட்ட மலேசியா-அமெரிக்கா பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம், ஏ.ஆர்.தி குறித்து முன்னாள் பொருளாதார அமைச்சர் ரஃபிசி ரம்லியின் விமர்சனம் குறித்து கருத்துரைத்த தெங்கு சஃப்ருல் அவ்வாறு தெரிவித்தார்.

நிச்சயமற்ற உலகளாவிய வர்த்தக சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கடந்த ஆண்டு அக்டோபரில் அமெரிக்காவுடன்  ஏ.ஆர்.தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதில் மலேசியாவின் அணுகுமுறையை அவர் தற்காப்பதாகவும், இன்று சமூக ஊடகத் தளமான எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

அந்நடவடிக்கை, வெளிநாடு செல்வதற்கு முன்னர் பயணக் காப்புறுதி எடுப்பதற்குச் சமமானது என்றும் அவர் சித்தரித்தார்.

அதோடு, அமெரிக்காவில் நீதிமன்ற செயல்முறை முடியும் வரை காத்திருக்காமல், மலேசியா விரைவாகச் செயல்பட்டது.

ஏனெனில், தாமதம் நாட்டை குறைந்த சாதகமான சூழ்நிலையில் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளக் கட்டாயப்படுத்தக்கூடும் என்றும் தெங்கு சஃப்ருல் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)