கோலாலம்பூர், 26 பிப்ரவரி (பெர்னாமா) -- புக்கிட் காயு ஈத்தாமில் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தாரின் கமண்டர் வாகனம் மீது நேற்று துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் 24 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் மிகவும் வருந்தத்தக்கது என்று கூறிய உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், இது தொடர்பில், தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.
''நாங்கள் மிகவும் வருந்தும் ஒரு சம்பவம். ஆனால் ஏ.கே.பி.எஸ் கமண்டர் அதிகாலை தொழுகைக்காக வெளியே சென்றபோது உயிர்த் தப்பியதற்கு நாங்கள் கடவுளிடம் நன்றி கூறுகிறோம். துப்பாக்கிச் சூடு அவரது வாகனத்தை மட்டுமே தாக்கியது. ஆனால் நாங்கள் சந்தேக நபரை கைது செய்துள்ளோம். கைது 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்திற்கு முன்பு நடந்தது. இப்போது விசாரணை செயல்முறை நடந்து வருகிறது,'' என்றார் அவர்.
நாட்டின் எல்லைப் பகுதிகளில் நிகழும் எந்தவொரு பாதுகாப்பு அச்சுறுத்தல் சம்பவத்திலும் அரசாங்கம் சமரசம் கொள்ளாது என்று, இன்று மக்களவையில் பேசிய டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் கூறினார்.
எல்லை தாண்டிய குற்றம், ஆயுதங்கள், போதைப்பொருள் மற்றும் மனித கடத்தல் போன்ற பல்வேறு அச்சுறுத்தல்களை நாட்டின் எல்லைப் பகுதிகளில் பணிபுரியும் நிறுவனங்கள் எதிர்கொள்வதால் அங்குள்ள பாதுகாப்பை உறுதிபடுத்துவதில் அரசாங்கம் முன்னுரிமை அளிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]