கோலாலம்பூர், 26 பிப்ரவரி (பெர்னாமா) -- அணு ஆயுதப் பிரச்சனை தொடர்பாக அமெரிக்காவும் ஈரானும் தொடர்ந்து பேச்சுவார்த்தை மேற்கொண்டு அரசதந்திர அணுகுமுறையைப் பேண வேண்டும் என்று மலேசியா நம்புகிறது.
உலகப் பொருளாதாரத்தைப் பாதிக்கக்கூடிய போரைத் தவிர்க்கவும், பதற்றங்களைக் குறைக்கவும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமாட் ஹசான் தெரிவித்தார்.
''ஓமானில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஓமான் மத்தியஸ்தராகவும், ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டது. வாஷிங்டனில் இருந்தபோது நான் வெளியுறவு அமைச்சர் ஓமரை சந்தித்தேன். போருக்கு வழிவகுக்கும் எதுவும் ஏற்படாதவாறு, இரு தரப்பினரையும் விட்டுக்கொடுக்க அவரது முழு திறனையும் பயன்படுத்துமாறு நான் ஏற்கனவே அவரிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்,'' என்றார் அவர்.
வியாழக்கிழமை, மக்களவையில் நடைபெற்ற அமைச்சர்களின் கேள்வி பதில் நேரத்தின் போது, முஹமாட் ஹசான் அவ்வாறு கூறினார்.
இன்று ஜெனீவாவில் தொடரும் பேச்சுவார்த்தைகள், இரு நாடுகளும் அரச தந்திரங்கள் வழி அணு ஆயுதப் பிரச்சனைக்கு தீர்வுக் காண முயல்வதை காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]